திருவண்ணாமலை மலை மீது வெளிநாட்டு பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தவருக்கு மாவுகட்டு போடப்பட்டது.
பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் சோபிலாகிரி (வயது 47). கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்த இவர் இங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி காலை, மாலை என இருவேளையும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலை சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது திருவண்ணாமலை பேகோபுரம் 6வது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(35) அறிமுகமானார். அவருடன் சென்று மலை மீதுள்ள இடங்களை சுற்றி பார்த்தார். நேற்று முன்தினம் கந்தாஸ்ரமத்திற்கு 2 பேரும் சென்றனர். அந்த சமயத்தில் வெங்டேசன், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அந்த பெண், சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரத்திற்கு தகவல் தெரிவித்தார். பிறகு நேற்று மேற்கு காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறினார். போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பெண், மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் மாவட்ட எஸ்.பி. சுதாகர் விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பலாத்காரம் செய்த வாலிபரை பிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் மலை மீது சுற்றித் திரியும் 7 பேரை பிடித்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மைதானத்தில் 7 பேரையும் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பை நடத்தினர். ஒவ்வொருவராக முகத்தை பார்த்து இல்லை என்று சொல்லி வந்தவர் கடைசியாக 7வது ஆளாக நின்றிருந்த வெங்கடேசனை பார்த்து இவர்தான் என அடையாளம் காட்டினார்.
இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கை, கால் உடைந்த நிலையில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. தப்பியோடிய போது கீழே விழந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.