திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குறித்து அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையத்தில் சிவாச்சாரியார்கள் புகார் அளித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். பவுர்ணமி போன்ற விழா காலங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் அண்ணாமலையார் கோயில் பெண் பணியாளர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அந்த பெண் ரூ.4 லட்சம் கொடுத்து வேலைக்கு வந்ததாக தெரிவித்து வேண்டப்பட்டவர்களை சாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் பணியமர்த்துகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கோயில் பணியாளர் சதீஷ் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் புரோக்கர்களை கட்டுப்படுத்தி சாதாரண பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இன்னொரு ஆடியோ வெளியாகியது. இதில் பேசும் கோயில் பணியாளர் நிர்மல் என்பவர், உன் மீது புகார் வருகிறது, 10 டிக்கெட் காசு வந்தால் ஒரு டிக்கெட் காசு மட்டும் கொடுத்து விட்டு மற்ற காசை பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறாய், அண்ணாமலையார் சொத்தை சாப்பிடுவதற்காக வந்திருக்கிறாயா? என ஜெசி(இணை ஆணையர்) என என்னை திட்டினார், கோயில் காசுக்கு யார் ஆசைப்படுகிறார்களோ அவர்களை கேட்கவில்லை. மேனேஜர் (செந்தில்) பாவம். அவர் என்ன செய்வார்? மூன்று நாள் முன்பு டிரைவர் ராஜா என்பவர் என்னிடம் வந்து வாரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும், டிக்கெட் கவுண்டரில் தானே இருக்கிறாய் கொடு என்று கேட்டார். முடியாது என சொல்லிவிட்டேன். என்னை அந்த பணியிலிருந்து மாற்றி விட்டார்கள் என்று அந்த ஆடியோவில் பேசியிருந்தார்.
இதையடுத்து களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் இன்று மாலை புகார் அளித்தனர்.
அதில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சிவாச்சாரியார்களாக இருந்து வரும் எங்கள் மீது பார்வையில் காணும் ஆடியோ பதிவில், இத்திருக்கோயிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் ச.கண்ணன் என்பவர் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் வெளிநபரிடம் செல்போன் மூலம் செய்தி பரப்பி உள்ளார். எனவே, அவர் மீதும், வெளி நபர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
பிறகு அருணாசலம் ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் தலைவர் பி.டி.ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அவதூறாக ஒரு ஆடியோ வெளியிடப்பட்டது. உண்மைக்கு புறம்பான சில வார்த்தைகள் எல்லாம் அதில் பேசப்பட்டு சிவாச்சாரியார்கள், பணியாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எல்லாம் பரப்பி உள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் புகார் அளித்திருக்கிறோம்.
அவதூறாக பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலையாரின் புகழ் உலகெங்கும் இருக்கக்கூடிய சூழ்நிலை இந்த திருக்கோயிலை பற்றி அவதூறாக பேசுவது நமது ஊருக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும். நமது ஊரையும், அண்ணாமலைவர் கோயிலையும் காப்பது எங்களுடைய கடமை, பணியாளர்களின் கடமை. எனவே ஆடியோவில் பேசிய கோயில் பணியாளர் கண்ணன் மற்றும் வெளிநபரான சுரேஷ் ஆகிய இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சங்கத்தின் செயலாளர் கீர்த்திவாசன், திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் செந்தில் (கோயில் மேலாளர்) மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.