உறுதி கொடுத்தால் சாலை மறியல் செய்யும் பொது மக்களிடம் பேசுவதாக கலெக்டரிடம் எம்.பி போனில் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள நெடுங்குணம் ஊராட்சி செயலாளராக பணிபுரித்து வந்தவர் ராஜேந்திரன். நேற்று இரவு வீட்டிலிருந்த போது இவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக சொல்லப்படுகிறது.

பெரணமல்லூர் பி.டி.ஓ. பாலமுருகன் என்பவர் பணி சுமையை ஏற்படுத்தி ராஜேந்திரனிடம் பணம் கேட்டு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், நேற்று வீடு வழங்கும் திட்டம் குறித்து ராஜேந்திரனுக்கு அவர் டார்ச்சர் தந்ததால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் மாரடைப்பு வந்து இறந்து விட்டதாக அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டினர்.
ராஜேந்திரன் இறப்புக்கு காரணமான பி.டி.ஓ. பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுங்குணம் கிராம மக்கள் இன்று சேத்துப்பட்டு-வந்தவாசி நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தக் கேள்விப்பட்டு அங்கு வந்த ஆரணி எம்.பி தரணிவேந்தன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பி.டி.ஓ. மீது நடவடிக்கை எடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கிராம மக்கள் கூறினர். இதையடுத்து கலெக்டரை போனில் தொடர்பு கொண்டு எம்.பி தரணிவேந்தன் பேசினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் கிராம மக்களிடம் பேசுவதாக போனில் அவர் தெரிவித்தார்.
அதன் பின் போராட்டம் நடத்தியவர் மத்தியில் அவர் பேசுகையில் காலையில் இப்பிரச்சினை குறித்த கலெக்டரிடம் பேசி விட்டேன். அதன் பிறகு திட்ட இயக்குனரிடமும் பேசினேன். இப்போது கலெக்டரிடம் பேசினேன். நடவடிக்கை எடுப்பதாக கூறி இருக்கிறார் என்றார்.
இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.