Homeசெய்திகள்திருவண்ணாமலை: விரைவு பெறும் ரிங் ரோடு திட்டம்

திருவண்ணாமலை: விரைவு பெறும் ரிங் ரோடு திட்டம்

திருவண்ணாமலை: விரைவு பெறும் ரிங் ரோடு திட்டம்

திருவண்ணாமலையில் 9 பாதைகளையும் இணைக்கும் ரிங் ரோடு திட்டத்தை விரைவாக முடிக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும்¸ பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. அண்ணாமலையார் கோயில்¸ புகழ் பெற்ற மகான்களின் ஆசிரமங்கள் ஆகியவற்றிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி தினத்திலும்¸ கார்த்திகை தீபத் திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல பொதுமக்கள் வருவார்கள். 

இதன் காரணமாக திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த நேரத்தில் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும். திருவண்ணாமலை தீபத் திருவிழா¸ பவுர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள் குறைவாக வரும் காலமான 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் திருவண்ணாமலைக்கு வரும் 9 வழிகளையும் இணைக்கும் விதம் ரிங் ரோடு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. 

நில ஆர்ஜிதம் செய்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு¸ கோர்ட்டு வழக்கு போன்ற காரணங்களால் இத்திட்டம் இதுநாள் வரை முழுமை பெறவில்லை. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த ரிங் ரோடு திட்டத்தை முடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

வேலூர் ரோட்டிலிருந்து தொடங்கி அவலூர் பேட்டை சாலை¸ திண்டிவனம் சாலை¸ வேட்டவலம் சாலை¸ திருக்கோயிலூர் சாலை¸ மணலூர்;பேட்டை சாலை¸ தண்டராம்பட்டு சாலை ஆகியவற்றை இணைத்து செங்கம் ரோடு வரை இந்த ரிங் ரோடு போடப்பட்டுள்ளது. செங்கம் ரோட்டிலிருந்து காஞ்சி ரோடு வழியாக வேலூர் ரோட்டை முழு வட்டமாக இணைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை. 

செங்கம் ரோட்டில் முழுமை
பெறாமல் உள்ள ரிங் ரோடு 

இந்த பணிகளை தொடங்க வேண்டுமானால் அத்தியந்தல்¸ அடிஅண்ணாமலை¸ தேவனந்தல்¸ ஆடையூர்¸ வேங்கிக்கால்¸ இனாம்காரியந்தல் ஆகிய 6 ஊராட்சிகளில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டும். அதன்படி அத்தியந்தலில் 17ஆயிரத்து 982 சதுர அடியும்¸ அடிஅண்ணாமலையில் 74ஆயிரத்து 458 சதுர அடியும்¸ தேவனந்தலில் 16ஆயிரத்து 563 சதுர அடியும்¸ ஆடையூரில் 84ஆயிரத்து 728 சதுர அடியும்¸ வேங்கிக்காலில் 12ஆயிரத்து 797 சதுர அடியும்¸ இனாம் காரியந்தலில் 24ஆயிரத்து 818 சதுர அடியும் நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.122 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 599 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்¸ ஒன்று அரசு சட்ட விதிக்கு உட்பட்டு நிலத்தை ஆர்ஜிதப்படுத்துவது¸ இன்னொன்று ஆர்ஜிதம் செய்யப்படும் நிலங்களின் உரிமையாளர்களிடம் நேரிடையாக பேச்சு வார்த்தை நடத்தி ஆர்ஜிதம் செய்வது என்ற 2 நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்ஜிதம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலங்களுக்கு 2013ம் ஆண்டிலிருந்து 12 சதவீத வட்டி கணக்கீடு செய்யப்பட்டு தொகை தரப்படும். அரசு சட்ட விதிக்கு உட்பட்டு நிலத்தை ஆர்ஜிதம் செய்யப்படும் போது நிலத்தை இழந்தவர்கள் வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டு மூலம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு கால நேர விரயம்¸ வழக்கு தொடர்வதற்கான செலவு ஆகியவை அவர்களுக்கு உண்டாகும். 

நேரடி பேச்சு வார்த்தை என்றால் 1 மாதத்திற்குள் அதற்கான பலன்களை நிலம் வழங்குபவர்கள் பெறலாம். அரசு மதிப்பீட்டை விட 25 சதவீதம் அதிகம்¸ ஊக்கத்தொகை¸ மரங்களுக்கு 100 சதவீத இழப்பீடு¸ கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்யும் தொகை போன்றவை கணக்கீடு செய்து தரப்படும். ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நில உரிமையாளர்களை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நில ஆர்ஜித பணிகள் விரைவாக முடிந்து ரிங் ரோடு திட்டம் நிறைவு பெறும் சூழல் உருவாகி உள்ளது என்றனர். 

மேலும் பொதுமக்களின் வசதிக்காக அவலூர் பேட்டை ரோடு¸ வேட்டவலம் ரோடு ஆகியவற்றில் ரயில்வே மேம்பாலம் கட்டவும்¸ திருவண்ணாமலையில் புதியதாக நவீன பஸ் நிலையம் கட்டவும் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. மேலும் திண்டிவனம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது. இதோடு மட்டுமன்றி பல இடங்களில் ரோடுகளை அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ரூ.50 லட்சத்தில் அண்ணா நுழைவு வாயில் அருகில்  ரவுண்டனா அமைக்கப்பட உள்ளது. இதன் அருகில் புதிய வடிவில் அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டு வருகிறது. 

அண்ணா நுழைவு வாயில் மாதிரி தோற்றம் 

அதேபோல் கிரிவலப் பாதையில் அறிவொளி பூங்கா எதிரே ரூ.45 லட்சம் மதிப்பிலும்,  செங்கம் சாலை இணைப்பு பகுதியில் சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் ரூ.48 லட்சம் மதிப்பிலும், கிரிவலப் பாதையில் காஞ்சி இணைப்பு சாலை அருகே உள்ள அபய மண்டபம் அருகே ரூ.32 லட்சம் மதிப்பிலும் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. 4 இடங்களில் ரவுண்டானா அமைக்கும் பணிக்கு மொத்தம் ரூ.1கோடியே 75லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடவீதியை சுற்றிலும் காங்கிரீட் சாலைகளும் போடப்பட உள்ளது. இவையெல்லாம் நிறைவு பெறும் பட்சத்தில் திருவண்ணாமலை ஒரு புதிய வடிவை பெறும் என்பது நிச்சயம். 

-செந்தில் அருணாச்சலம். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!