Homeஆன்மீகம்ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

 

திருவண்ணாமலை கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சியில் அம்மனுக்கு பெண்கள் வளையல் வைத்து படைத்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தமும் நடைபெற்றது.

அம்பாளோடு தொடர்புடைய பல சிறப்பு நலன்களை தன்னகத்தே கொண்ட அற்புதமான நாள் ஆடிப்பூரமாகும். அம்பிகையின் அவதார நாளான இந்நாளில் அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும். ஆண்டாள் நாச்சியாரின் அவதார திருநாளும் இந்த ஆடிப்பூரம் தான். ஆடிப்பூர விழா சைவ, வைணவ பேதமை இன்றி எல்லா கோயில்களிலும் மிக கோலாகலமாக நடைபெறும்.

அம்பாளுக்கு வளைகாப்பிட்டு உள் அன்போடு வழிபாடு செய்கிறவர்களுக்கு குழந்தை பேறு தரும் அதீத சக்தியை கொண்டது ஆடிப்பூரம். இதேபோல் அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுகிற பெண்களுக்கு திருமணமும் கூடி வரும். இது தவிர சுமங்கலி பெண்களும், கர்ப்பிணி பெண்களும் ஆடிப்பூர தன்று விரதம் இருந்து அம்மனை வழிபடுவர்.

இந்த ஆடிப்பூரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விசேஷமாக தீமிதி விழாவோடு நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். சிவன் கோயில்களில் திருவண்ணாமலை கோயிலில் மட்டுமே இந்த தீமிதி விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாட்களாக காலை, இரவு என இரு வேலைகளிலும் விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெற்றது.

ஆடிப்பூரம்-அம்மன் கைகளில் வளையல் வைத்து பெண்கள் பூஜை

பத்தாம் நாள் உற்சவமான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் நடைபெற்றது. பிறகு பராசக்தி அம்மன் ராஜகோபுரம் அருகிலுள்ள வளைகாப்பு மண்டபத்தில் எழுந்தருளினார் அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பால், சந்தனம், அபிஷேகத்தூள், பன்னீர், தயிர், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மாலையில் வளைகாப்பு நடைபெற்றது. இதையொட்டி பராசக்தி அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வளையல் அணிவிக்கப்பட்டது. அம்மன் கைகளில் வளையல் வைத்து படைக்க கூட்டம் முண்டியத்தது. பக்தர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வளையல் படைத்து தரப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். சுகபிரசவம் நடக்க ஏராளமான கர்ப்பிணி பெண்கள் வேண்டிக் கொண்டனர்.

மேலும் சிவனடியார்களால் வயதான பெண்கள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீமந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. பெண்களுக்கு வளையல் அடங்கிய  பிரசாத பைகள் வழங்கப்பட்டன.

ஆடிப்பூர விழா 9 நாட்களும் இறைவியைத் தரிசித்தவர்கள் இரு வினையும் மும்மலங்களும் அடங்கிச் சத்திநிபாதம் பெற்றுப் பேரின்பத்தில் மூழ்குவர் என்ற உண்மை உணர்த்து வண்ணம் இன்று காலை ஐந்தாம் பிரகாரம் அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!