Homeஆன்மீகம்பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தல், தரைவிரிப்பு

பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தல், தரைவிரிப்பு

பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தல், தரைவிரிப்பு
சித்ரா பவுர்ணமிக்கு வருகை தரும் பக்தர்களுக்காக அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஏற்பாடு
லட்சக்கணக்கில் பிஸ்கட் பாக்கெட், குடிநீர் பாட்டில்கள் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்படும் என அறிவிப்பு

சித்ரா பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு 2லட்சத்து 25 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தில் கடலை மிட்டாய், பிஸ்கட் பாக்கெட்டுகளை உபயதாரர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வருடம் சித்ரா பவுர்ணமி 23.04.2024 அன்று அதிகாலை 4.16 தொடங்கி 24.04.2024 அன்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. திருவண்ணாமலைக்கு கிரிவலம் வர பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்கிளிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தல், தரைவிரிப்பு

இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கோயிலுக்கு வருகைப் புரியும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 225 லட்சம் குடிநீர் பாட்டில்கள் ரூ.8.75 லட்சம் மதிப்பில் 1லட்சத்து 25 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்கள் ரூ.16 லட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் மோர்கள், ரூ.1 லட்சத்து 80 லட்சம் மதிப்பில் 60ஆயிரம் கடலை உருண்டைகள் உபயதாரர்கள் மூலம் வழங்க கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் குடிநீர் வசதிக்காக கூடுதலாக ரூ.8லட்சம் மதிப்பில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் வசதியாக தரிசனம் செய்ய பவுர்ணமி தோறும் நிழற்பந்தல் வசதி செய்யப்பட்டு வருகிறது.

குளிர்ச்சி தரும் தரை விரிப்பு

தற்போது கூடுதலாக வட ஒத்தவாடை தெருவில் வடக்கிழக்கு மூலையில் அமைந்துள்ள பன்னீர் கோல்டு கவரிங் கடை முதல் தேரடி வீதி வழியாக பூதநாராயணன் கோயில் வரை நிழற்பந்தல் வசதி மற்றும் தரை விரிப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் லாரி மூலம் கியூலைன் கீழே தண்ணீர் தெளிக்கப்படவுள்ளது. ராஜகோபுரம் முதல் திருமஞ்சன கோபுரம் வரை நகரும் நிழற் தகரக்கொட்டகை அமைக்கப்பட உள்ளது.

பக்தர்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்திட கோயிலின் உள்ளே பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் தேங்காய் நார்களினால் ஆன தரை விரிப்பு வசதிகள் மற்றும் குளிர்ச்சி தரும் வகையில் வெண்மை நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தரை விரிப்புகள் அனைத்தும் தண்ணீர் தெளிக்கப்படவுள்ளது

கோயில் வளாகத்தில் நான்கு இடங்களில் போதுமான அளவிற்கு ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் தரிசன வழியில் கூடுதலாக 50 இடங்களில் மின்விசிறி வசதி செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கூடுதலாக 100 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் திருக்கோயிலின் உள்ளே காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.

லட்டு பிரசாதம்

பக்தர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை வெளிமுகமை(outsourcing) பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் மூலம் அகற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெறும் வகையில் தரிசன வழியில் இருக்கைகள் வசதி (SS Bench) செய்யப்பட்டுள்ளது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் கண் குளிர்ந்து மனம் மகிழும் வகையில் ராஜ கோபுரத்தில் மின் அலங்காரம் இவ்வாண்டு முதல் செய்யப்படவுள்ளது. மாற்றுதிறனாளிகள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு வழி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

சித்ரா பவுர்ணமி அன்று நாள் முழுவதும் பிரசாதம் திட்டத்தின் படி லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் கூறினார்.

பூதநாராயணன் கோயில் அருகில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்ததை அடுத்து அந்த கோயில் வரை முதன்முறையாக நிழற்பந்தலும், தரைவிரிப்பும் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!