26-4-2025 அன்று ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும்,கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். 11-5-2025 பகல் 1-19 மணிக்கு குருபகவான் மிதுன ராசிக்கு சென்றிருக்கிறார். இந்த 2 பெயர்ச்சிகளும் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

துலா ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்த குரு பகவான் 11/5/2025 முதல் 9ம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து1,3,5 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 5ல் அமர்ந்து 7,11,2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் 26/4/2025 முதல் 5.11 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வை இடுகின்றனர்
இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்கள் உடல் ஸ்தானத்தை பொருத்தவரை கடந்த காலத்தை காட்டிலும் இக்காலமானது அதிக நன்மைகள் தரக்கூடிய காலமாகும். உடலில் புத்துணர்வு ஏற்படும். மனச்சோர்வு நீங்கும். நீங்கள் எதை எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ அது நடக்கக்கூடிய காலமாக இக்காலம் இருக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் காலமாக இந்த குரு பெயர்ச்சி காலம் அமையும்.
உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி பகவானின் பார்வை விழுகிறது. ஆகவே பொருளாதார ரீதியாக நல்ல பலன்கள் உங்களுக்கு காணப்படுகிறது. அதே சமயம் செலவும் அதற்கு தகுந்தாற் போல் வந்து கொண்டே இருக்கும். செலவுகளை சுருக்கி வரவுகளை தக்க வைக்க வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை பளிச்சென்று போட்டு உடைப்பதை தவிர்க்கவேண்டும். அடுத்தவர்களின் இயல்பை அறிந்து அதற்கு தகுந்தவாறு பேச்சுக்களை சீர்திருத்தி பேச வேண்டும். நீங்கள் நல்லவர்கள் தான். ஆனால் நீங்கள் பேசும் பேச்சுக்கள் அடுத்தவர்கள் மனதில் தவறான எண்ணத்தை உருவாக்கும் என்பதால் ஜாக்கிரதை தேவை.
குடும்பத்தை பொறுத்தவரை அருமையான நேரம் ஆகும். இருந்த போதிலும் இவ்வீட்டிற்கு சனி பார்வை விழுவது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். ஆகவே குடும்ப பிரச்சினைகளை குடும்பத்திற்குள் வைத்து தீர்ப்பது நல்லது. வெளி ஆட்களை வைத்து பஞ்சாயத்து செய்ய அனுமதிக்க வேண்டாம்.
உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை வீட்டிற்கு குரு பார்வை விழுவது மிகவும் நல்லது. இழந்த தைரியத்தை திரும்ப பெறக்கூடிய காலமாகும். எந்த சூழ்நிலையிலும், எதிலும் உங்கள் மன உறுதியானது நிலைத்து நிற்கும்.இது உங்களுக்கு இயற்கையாகவே ஆண்டவன் கொடுத்திருக்கும் வரப்பிரசாதமாகும். ஆகவே இந்த காலம் உங்களுக்கு மிகவும் நல்ல காலமாகும்.
உங்களது சகோதர பாவத்தை பொறுத்த வரை அவர்களின் சூழ்நிலை உங்களுக்கு அனுசரணையாக இருக்கும். அவர்களால் உங்களுக்கும், உங்களால் அவருக்கும் நல்லதொரு பந்தம் ஏற்படும். சுப காரிய நிகழ்வுகள் உண்டு.
உங்கள் தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை. ஆனால் உடல் நிலையில் சிறிது பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது. சளி மற்றும் வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பிணி, பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தக்க மருத்துவ முறைகளை கையாளவும். தாய்- மக்கள் உறவுமுறை சீராக இருக்கும். தாயால் சிலர் ஆதாயம் அடைவீர்கள்.
உங்களது வீடு மனையை பொறுத்த வரை புதிய மனைகள் வாங்கவோ அல்லது கட்டிய வீட்டை வாங்கவோ அருமையான நேரமாகும். ஒரு சிலருக்கு பரிவர்த்தனை யோகமும் உருவாகும். விற்காத மனை விற்று தீரும். உங்களது வண்டி, வாகனத்தை பொருத்தவரை புதிய வாகனங்கள் வாங்குவதற்கு இது ஏற்ற காலமாகும். வாகன துறையில் நல்லபடியாக லாபம் பெருவீர்கள். வண்டி, வாகனங்களுக்கு எல்லை தெய்வங்கள் வலு சேர்க்கும் என்பதால் அவர்களுக்கு பூஜை போட்டுக் கொள்ளவும்.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்தில் சனி,ராகு ஆகிய இரு கிரகங்கள் அமர்ந்துள்ளது. இது பலவீனமான நேரமாகும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனைகள் செய்து வரவும். பாவபலம் குறைந்து புண்ணிய பலம் அதிகரிக்கும். இல்லையெனில் எங்களிடம் கிடைக்கும் குரு யந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள்.
உங்களது குழந்தைகளின் கல்வி நிலை, உடல் நிலை சுமாராக உள்ளது. முக்கியமாக கல்வியில் மந்த நிலை காணப்படுவதால் அவர்களை கொஞ்சம் கவனித்து பார்க்கவும்.
உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் கட்டுக்குள் வரக்கூடிய நேரம் ஆகும். அதே சமயம் தொழில் ரீதியாக சில கடன்கள் வாங்கவும் நேரிடும். அது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. அதை சமாளித்து விடுவீர்கள். வெளியில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். அதேபோல் உங்களுக்கு வரவேண்டிய பொருளாதாரமும் இந்த வருட காலத்திற்குள் வந்து சேரும்.
உங்கள் உடம்பில் முகம் மாறுதல் மற்றும் முகம் சம்பந்தப்பட்ட அமைப்பில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 6 மாதத்திற்கு ஒரு முறை கோமியத்தில் முகம் கழுவ வேண்டும். மற்றபடி எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களது திருமண பாவத்தை பொறுத்தவரை இங்கு சனி பகவானின் பார்வை விழுகிறது.
உங்களுக்கு பூரண குலம் குருபலம் இருந்தாலும் சனி பார்வையானது சில தடைகளை ஏற்படுத்தும் என்பதால் சனி தோறும் விநாயகர் வழிபாடு செய்வது, தினமும் காகத்திற்கு அன்னமிடுவது மிகவும் நல்ல பரிகாரமாகும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் திருமணஞ்சேரி சென்று வந்தால் திருமணம் நிச்சயம் கை கூடும். திருமணமான தம்பதியருக்குள் சிற்சில வேளைகளில் கருத்து வேறுபாடு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தினால் வாழ்க்கையில் சச்சரவு என்பதற்கே வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.
உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு பலம் நன்றாக உள்ளது. அதேபோல் உங்கள் ஆயுள் பாவமும் கெட்டியாக இருக்கிறது. உங்களது சத்ரு பாவம் பலவீனப்பட்டு உள்ளதால் எதிரிகளை அடக்கி ஆளக்கூடிய தன்மையும் உங்களுக்கு வந்து சேரும்.
உங்களது பாக்கிய ஸ்தானத்தை பொருத்தவரை ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது. பல எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த நீங்கள் இந்த வருடம் முதல் சந்தோஷ நன்மைகளை அனுபவிக்க கூடிய காலமாகும்.
உங்கள் தந்தையாரின் ஆயுள் பாவம் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் நரம்பு சம்பந்தப்பட்ட இனங்களால் பிணி, பீடைகள் ஏற்படும். தந்தை- மக்கள் உறவுமுறை சீர்பெறும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானமானது அருமையாக உள்ளது. தேவையான படிப்பிற்கு தேவையான கல்லூரிகள் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம் உங்கள் மதி நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டும். உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத் துறையினருக்கு விளைச்சல் நன்றாகவும், மருத்துவத்துறையினருக்கு மந்தகாச புன்னகையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஏற்றம் தரும் காலமாகவும். சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கை கூடுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும், வேலையில்லாதவர்களுக்கு அதிர்ஷ்டத்தால் வேலை கிடைப்பதும் நடக்கும்.
உங்கள் லாப ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்து சனி பகவான் பார்வையிடுகிறார். லாபம் என்பது பணம் மட்டுமல்ல. நம்மை சுற்றி இருக்கும் சந்தோஷமும் குடும்பமும் ஆகும். என்னதான் நமக்கு இந்த குரு பெயர்ச்சி பலன்கள் நல்ல ஒரு சூழ்நிலையை கொடுத்தாலும் சனி பார்வை என்பது பணவரவில் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தும் காலமாகவே இருக்கும்.
ஒருவேளை பணம் சரியாக வந்தாலும் தேவையில்லாமல் செலவுகளும் வரும் ஆகவே குடும்பத்திலும் சரி, பணத்திலும் சரி ஜாக்கிரதையாக இருந்து காலத்தை நகர்த்த வேண்டும். உங்களின் அயன சயன ஸ்தானத்தை பொருத்தவரை குரு, கேது ஆகிய இருவரும் நன்மை தரும் இடத்திலும் சனி, ராகு இருவரும் அசுப பலன்கள் தரும் இடத்திலும் உள்ளார்கள். இருந்தாலும் பஞ்சம சனி ஆனவர் உங்கள் ராசிக்கு யோகாதிபதி என்பதால் நல்லதை தான் செய்வார். ஆக ராகு ஒருவரே தீய பலன்களை கொடுக்கும் நிலையில் உள்ளார்.
ஆகவே செவ்வாய் தோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். உங்கள் ராசி அதிபதி சுக்கிரனின் அதி தேவதையான ஸ்ரீ மகாலட்சுமியை வணங்கி வர மங்களங்கள் பெருகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திருநள்ளாறு, குச்சனூர், ஏரி குப்பம் ஸ்தலங்களில் உள்ள சனி பகவானுக்கு தீபம் ஏற்றுவதும், திருப்பாம்புரம், காளகஸ்தி திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவானுக்கு பிரீதி செய்வதும், அனாதை குழந்தைகளுக்கு வஸ்திரதானம் வழங்குவதும், நூல்களில் சனி கவசத்தை பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரித்த குரு பகவான் 11/5/2025 முதல் 8ஆம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 12,2, 4 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 4ல் அமர்ந்து 6,10,1 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகுஇ கேதுக்கள் 26/4/2025 முதல் 4,10 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆக இந்த கிரக அமைப்புகள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் ராசிக்கு எவ்வித பலன்களை வழங்கும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இவ்வருடம் உங்களுக்கு குரு பகவான் 8ல் அமர்ந்துள்ளார். ‘இம்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போம் படியானதும்’ என்ற கவிக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் நிலைமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கு தகுந்தபடி நீங்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமாக நான் இப்படித்தான் இருப்பேன் என்று மனதில் யோசிக்க வேண்டாம். மாற்றம் ஒன்றே மாறாதது.
இவ் வருடத்தில் மன நிலையில் மாறுபாடு உண்டு. ஆதலால் உடலில் சோர்வுதன்மை தென்படும். நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்றாக நடக்கும். இந்த ஒரு வருட காலம் மட்டுமே. அடுத்த வருடம் சரியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
உங்களது தன ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குருவின் அருட்பார்வை விழுவதால் பொருளாதாரத்தில் ஏதும் சிக்கல்கள் ஏற்படாது. அதே சமயம் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற சூழ்நிலையில் கிரகங்கள் தென்படுகிறது. உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை வார்த்தைகளை அளந்து நிதானமாக பேச வேண்டும். நீங்கள் நல்லதை பேசினால் கூட சாதுவாக பேச வேண்டும். தேள் கொட்டியது போல் பேச வேண்டாம். தவளை தன் வாயால் தான் கெடும்’ என்ற பழமொழி உண்டு. குடும்பத்தைப் பொறுத்தவரை சிற்சில குழப்பங்கள் கண்டிப்பாக ஏற்படும்.
எதிர்காலத்தை நினைத்து இப்பொழுதே சரியான முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த வருட காலம் உங்களுக்கு சரியாக இருக்கும். உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு மன தைரியம் அதிகம் உண்டு. எதையும் சமாளிக்க கூடிய தன்மையும் உண்டு.
ஆன்மீகம், யோகா போன்ற வழிகளில் மனதை ஈடுபடுத்தவும். உங்கள் சகோதர, சகோதரி பாவத்தை பொறுத்த வரை அவர்களிடம் வம்புக்கு செல்ல வேண்டாம். போதுமானவரை அமைதியை கடைபிடிப்பது மிகவும் நல்லது. வரும் காலத்தில் அவர்கள் உதவி உங்களுக்கு தேவை.
உங்கள் தாய் ஸ்தானத்தை பொருத்தவரை சனி, ராகு அமர்ந்து குரு பகவான் பார்வையிடுகிறார். தாயின் ஆயுள் தீர்க்கம் உண்டாகும். ஆகையால் தாயின் கால்களில் ஏதாவது நோய் பிரச்சனைகள் ஏற்படலாம். வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் கவனிக்கப்பட வேண்டியதாகும். தாய்- மக்கள் உறவுமுறை சீராக இருக்கும். உங்கள் வீடுஇ மனையை பொறுத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நல்லது.
புதிய வீடு, மனை வாங்க இது உகந்த காலம் அல்ல. அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். உங்களது வண்டி, வாகனத்தை பொருத்தவரை பழுது செலவுகள் அதிகம் ஏற்படும். புதிய வண்டி வாங்குவதற்கு இது உகந்த காலம் அல்ல. வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடம் சற்று பலவீனபட்டுள்ளது. ஆகவே குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டு வரவும். இதனால் பாவ பலம் குறைந்து புண்ணிய பலம் அதிகமாகும். உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை. உடல்நிலை ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையில் உள்ளது. கவனம் தேவை.
நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் நிச்சயம் குழந்தை பிறக்கும். ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். உங்கள் நோய் ஸ்தானத்தை பொருத்தவரை சதை, எலும்பு, ரத்தம் போன்றவற்றில் நோய் தாக்கங்கள் ஏற்படும்.கவனம் தேவை.
உங்களது கடன் ஸ்தானத்தை பொறுத்த வரை தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். கொடுக்கல், வாங்கல் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வு தேவை. கடன் வாங்குவதிலும், கையெழுத்து போடுவதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்கள் திருமண பாவத்தை பொருத்தவரை உங்களுக்கு இப்போது குருபலம் கிடையாது. அடுத்த வருடம் தான் பலம் கிடைக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். அடுத்த வருடம் நிச்சயம் திருமணத்தை எதிர்பார்க்கலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. இல்லை யெனில் பிரிவினை ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. தயவு செய்து புரிந்து நடந்து கொள்ளவும்.
உங்களுக்கு ஆயுள் பாவம் தீர்க்கமாக உள்ளது. அதேபோல் மாங்கல்ய ஸ்தானத்தில் சற்று பின்னடைவு உள்ளதால் ஸ்ரீமன் லட்சுமி நாராயணரை வழிபட்டு வர அனைத்தும் சரியாகும். உங்களது சத்ரு ஸ்தானமானது பலமுடையதாகிறது. ஆகவே இப்போது நாம் பதுங்க வேண்டிய நேரம்.பலம் வரும் பொழுது நாம் பார்த்து கொள்ளலாம். அதுவரை அமைதியை கடைப்பிடிக்கவும்.
உங்களது பாக்கியஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடம் ஓரளவுக்கு சாதகமான சூழ்நிலையில் உள்ளது. உங்களுடைய புண்ணிய பலமும்இ மூதாதையர்கள் ஆசியும் நிச்சயம் உங்களை வழிநடத்தும். தந்தையாரின் உடல்நிலை நன்றாக இருக்கும். தந்தையின் ஆயுள் பாவம் தீர்க்கம் உண்டு. தந்தை- மக்கள் உறவு முறை சீர் பெறும். தந்தை வழி சொத்துக்கள் சந்தோஷமாக பிரித்து தரப்படும்.
உங்கள் உயர் கல்வி ஸ்தானமானது பரவாயில்லை என்ற ரூபத்தில் உள்ளது. நீங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு கல்வி கற்க கூடிய சூழ்நிலை உண்டு. ஆகவே தைரியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ்க்கையில் சாதித்து வென்று காட்ட இது ஒரு சரியான நேரமாகும்.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்துள்ளார். எந்த தொழிலிலும் இருந்தாலும் நிலை மாற்றம் உண்டு. இதற்கு தீர்வு கிடையாது. விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மந்தமாகவும், மருத்துவத்துறையினருக்கு மந்தம் தரும் சூழ்நிலையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இடைஞ்சல்கள் வருவதும், சுயதொழில் புரிவவோருக்கு மூலதனபொருட்கள் பற்றாக்குறையும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு கஷ்டப்பட்டு ஜீவிதம் செய்வதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களை காலம் கை விடுவதும் நடக்கும்.
வேலையில்லாதவர்களுக்கு படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காது. உங்கள் லாப ஸ்தானத்தை பொருத்தவரை பலவீனமாகவே உள்ளது. நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்றாக நடக்கும். கடந்த காலத்தில் சேர்த்து வைத்தவைகளை இப்போது செலவு செய்யக்கூடிய நேரமாகும். பரவாயில்லை. அடுத்து காலம் வரும் பொழுது நாம் சரி செய்து கொள்ளலாம் .
ஆனால் குடும்பத்திலும் சரி, பொருளாதாரத்திலும் சரி மனநிலையை நிறைவாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எதையும் சமாளிக்கும் திறமை நமக்கு வந்து சேரும். லாபம் என்பது பணம் மட்டுமல்ல. நம் நிம்மதியும் கூட என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உங்களது அயன, சயன பாவத்தை பொறுத்த வரை பெரிய கிரகங்கள் அனைத்தும் சாதகமான சூழ்நிலையில் இல்லை. குரு பார்வை ஒன்றே நம்மை வாழ வைக்கும். ஆகவே ஒரு நிலைப்பட்ட மனதுடன் எந்த காரியத்தையும் எல்லா செயல்களையும் செய்து வர வேண்டும். அகலக்கால் வைக்க வேண்டாம். இன்னும் ஒரு வருட காலம் தான். அதற்கு பிறகு காலம் நம் கைகளில் வரும். நாம் நினைத்தது சாத்தியமாகும்.
உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் அதிதேவதையான முருகப்பெருமானை வணங்கி வர முயற்சிகள் வெற்றியாகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலம் ஊர்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், திருநள்ளாறு. ஏரி குப்பம், குச்சனூர் ஸ்தலங்களில் உள்ள சனி பகவானுக்கு பிரீதி செய்வதும், காளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு, கேதுகளுக்கு பரிகாரம் செய்வதும், ஆன்மீக சாதுக்களுக்கு வஸ்திர தானம் செய்வதும், நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்த குரு பகவான் 11/5/2025 முதல் 7ஆம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 3ல் அமர்ந்து 5, 9, 12 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் 26/4/2025 முதல் 3.9 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களின் உடல் ஸ்தானத்தை பொறுத்த வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7ம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சி காலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொற்காலமாகும். உடலில் பூரிப்பு உண்டாகும். மந்த தன்மை நீங்கும். எதிலும் பிரகாசிக்கும் சூழ்நிலை உருவாகும்.
கரடு முரடான சாலையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை வண்டியானது சமதள பாதையில் பயணிக்கும். மிகவும் நல்லதொரு காலகட்டம் தனுசு ராசி நேயர்களுக்கு உருவாகியுள்ளது. பீடு நடை போடுங்கள். உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை அனேக சிரமங்களுக்கு இடையே ஆட்பட்டு கொண்டிருந்த நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தடையில்லா தன வரவை எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலை உண்டு.
ஆனாலும் ஒரு சிலர் சுப காரிய நிகழ்வின் காரணமாக பணம் வந்த வழியே போகும் சூழ்நிலையும் உண்டு. நல்லது நடந்தால் நன்றாகத் தானே இருக்கும். உங்கள் வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை உங்களது பிடிவாதத்தை சற்று தளர்த்துவது நல்லது என தோன்றுகிறது. எதிலும் தலை நிமிர்ந்து நடக்கும் நீங்கள் உங்கள் அருகாமையில் இருந்து உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள். இதை தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
குடும்ப ஸ்தானத்தை பொருத்தவரை அருமையான நேரமாகும். குடும்பம் இனிதே அமையும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள். உங்களின் தைரிய ஸ்தானத்தில் சனி, ராகு கிரகங்கள் அமர்ந்துள்ளன.
இயற்கையிலேயே மன தைரியமிக்க நீங்கள் இக்காலகட்டத்தில் அருமையான ஒரு வாழ்க்கையை நடத்த கிரகங்கள் வழி வகுக்கும். மேலும் தைரியமும் கூடும். செயலிலும் ஆற்றல் வரும். உங்களது சகோதர பாவத்தை பொறுத்தவரை இங்கு சற்று முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே அவர்கள் விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதை தேவை. அதற்காக பேசாமல் இருக்க வேண்டாம். அவரவர் வேலையை பார்த்தாலே போதுமானது.
உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுளுக்கு எந்தவித பங்கமும் கிடையாது. தாய் -மக்கள் உறவு முறை நன்றாக இருக்கும். தாயின் உடல் நிலையில் மூச்சு விடுதல், சளி மற்றும் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தகுந்த மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும். உங்களால் தாயாருக்கு ஆதாயம் ஏற்படும்.
உங்களது வீடு, மனையை பொறுத்தவரை அற்புதமான காலகட்டமிது. இந்த காலத்தை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் விற்க முயற்சிக்கும் மனைகளை விற்றுக் கொள்ளலாம். வாங்க முயற்சிக்கும் மனைகளை வாங்கிக் கொள்ளலாம். பரிவர்த்தனை யோகமும் உண்டு. வீடு கட்டக்கூடிய யோகமும் உண்டு. உங்களது வண்டிஇ வாகன ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் ஏதுவான காலமாகும். வாகனங்களில் செல்லும்போது ஜாக்கிரதை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவான் பார்வை விழுந்துள்ளது. ஆகவே குலதெய்வ கோவிலுக்கு சென்று அபிஷேக, ஆராதனைகள் செய்து வரவும். இதனால் பாவ பலம் குறைந்து புண்ணிய பலம் அதிகரிக்கும். திருமணத்திற்கான முதல் படி இவ்விடம் என்பதாலும் இவ்விடத்திற்கு சனி பார்வை விழுவது அவ்வளவு நல்லதல்ல. ஆகவே செவ்வாய்க்கிழமை சனி ஓரையில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வாருங்கள். திருமண காரியங்கள் செவ்வனே நடந்தேறும்.
உங்களது புத்திர பாக்கியமானது சற்று தடை ஏற்பட்டுள்ளது. ஜாதகத்தில் புத்திர தோஷம் உள்ளவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும். எங்களிடம் கிடைக்கும் ஸ்ரீ குரு யந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் புத்திரப்பேறு உருவாகும். உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை. உடல்நிலை மந்தமாக உள்ளது. படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் கட்டுக்குள் வரும் நேரமாகும். அதேபோல் புதிய கடன்களும் உருவாகும். அதை தவிர்த்து விடுங்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் நீங்கி சுமூகமான ஒரு சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு உடலில் மறைவிடம் சம்பந்தப்பட்ட நோய்கள், வெப்பம் மற்றும் ரத்தம் சார்ந்த நோய் தாக்குதல்கள் ஏற்படும். கவனமுடன் கையாளவும்.
உங்களது திருமண பாவத்தை பொறுத்தவரை அற்புதமான நேரம் ஆகும். குருபலம் மிக்க நேரமிது. உங்களுக்கு இவ் வருடத்தில் கல்யாண மேளம் கொட்ட சரியான காலமாகும் . திருமணத் தடைகள் இருப்போர் திருமணஞ்சேரி சென்று திருமணம் மாலை வாங்கி வரவும். திருமணமான தம்பதியர்களுக்குள் இருந்து வந்த கசப்புணர்ச்சி மறைந்து நன்மைகள் பிறக்கும் காலமாகும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்.
குடும்ப வாழ்க்கை சந்தோசமாக செல்லும். உங்களது மாங்கல்ய ஸ்தானத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பு கிடையாது. அதேபோல் ஆயுள் ஸ்தானமும் நன்றாக உள்ளது. சத்ரு பாவத்தை பொறுத்தவரை உங்களுடன் பயணிப்பவர்களே முதுகில் குத்துவார்கள். கவனம் தேவை.
உங்களது பாக்யஸ்தானத்தை பொறுத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்துள்ளார். ஆகவே உங்கள் தந்தையாரின் உடல் நிலையில் கொஞ்சம் கவனம் தேவை. பெரிய விளைவுகள் ஏதும் இருக்காது. ஆனால் மனநிலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் உடல்நல கோளாறுகள் அவ்வப்போது ஏற்படும்.
தந்தை- மக்கள் உறவு முறை அவ்வளவு சரி இருக்காது. தந்தையார் இனம் புரியாத நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உண்டு. உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை படிப்பு நன்றாக இருந்தும் சரியான கல்லூரி கிடைக்காது. அதேசமயம் வெளி மாநிலத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சமயோசிதமாக முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஜீவன ஸ்தானத்தை பொருத்தவரை விவசாயத் துறையினருக்கு விளைச்சல் நன்றாகவும், மருத்துவத்துறையினருக்கு மாற்றம் தரும் வேளையும்இ இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இனக்கமான சூழ்நிலையும், சுய தொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைகொடுப்பதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலைக்கான உயர்வும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு குரு பகவான் பார்வை விழுந்துள்ளதால் அநேக சுப பலன்களை எதிர்பார்க்க முடியும். பணவரவிலும் சரி, குடும்பத்திலும் சரி, சுற்று வட்டாரங்களிலும் சரி நல்ல மதிப்பு மரியாதை உண்டு. ஆனால் வாய் மூடி அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. கொடுக்கல் வாங்கல் சரளமாக செல்லும். பண விஷயத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். அடுத்தவர்களுக்காக செலவிடுவதையும் குறைக்கவும்.
உங்கள் அயன, சயனத்தை ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி பகவான் பார்வை விழுகின்றது. எவ்வளவு தான் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நமக்கு சுப பலன்கள் ஏற்பட்டாலும் மனதில் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருக்கும். எதை விடுவது எதை செய்வது என்ற குழப்பம் மேலோங்கும். எந்த சூழ்நிலையிலும் உங்களது தைரியத்தை கைவிடக்கூடாது. அதேபோல் சனி பார்வையால் ஏற்படும் தீவினைகளை களைய சனிக்கிழமை தோறும் அன்ன தானம் செய்து வாருங்கள்.
உங்களது ராசி அதிபதி குருபகவானின் அதி தேவதையான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கி வர தடங்கல்கள் விலகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திருநள்ளாறுஇ குச்சனூர், ஏரி குப்பம் சென்று சனி பகவானுக்கு பிரிதி செய்வதும், திருப்பாம்புரம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், ஊனமுற்றவர்களுக்கு கருவி தானம் செய்வதும், நூல்களில் குரு கவசத்தை பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் சஞ்சரித்த குருபகவான் 11/5/2025 முதல் 6ம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 10, 12, 2 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 2 இல் அமர்ந்து 4.8.11 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் 26/4/2025 முதல் 2,8ம் இடம் பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆகவே இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்கள் உடல் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசிக்கு 5-ல் இருந்த குரு பகவான் 6ம் இடத்திற்கு பெயர்ந்துவிட்டார். இது நல்லதல்ல. மன ரீதியான சில பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டாலே உடல்நிலையும் கெடும்.
ஆகவே உடல் விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதை தேவை. கிரகப்பெயர்ச்சிகளால் ஏற்படும் சுப, அசுப பலன்களை சமநிலைப்படுத்துவதே வாழ்க்கையின் குறிக்கோளாகும். ஆகவே நம் வாழ்க்கையில் மனநிலையை உறுதிப்பட வைத்துக் கொண்டால் வரக்கூடிய எந்த காலமாக இருந்தாலும் சமாளிக்கக்கூடிய தைரியம் நமக்கு கிடைக்கும்.
உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி, ராகு இருவரும் கூடி அமர்ந்துள்ளார்கள். உங்களுக்கு தற்காலிக நாக தோஷம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தனவரவில் தடை ஏற்படும். எல்லா காலமும் ஒரே காலமாக இருந்து விடாது அல்லவா! சேமித்த பணத்தை சிறிது கரைப்பதற்கான நேரம் இந்த நேரமே. இதை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். வரவு, செலவுகளை திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த வேண்டும்.
உங்களது வாக்கு ஸ்தானத்தை பொருத்தவரை அதிக அளவு தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருந்து விடவும். நாம் பேசும் பேச்சுகளால் சில பல காரியங்கள் கெட்டுவிடும் சூழ்நிலை ஏற்படும். உங்களது குடும்பஸ்தானத்தை பொருத்தவரை இந்த வருடம் இந்த குரு பெயர்ச்சி காலம் சற்று போராட்ட காலமே. இதை தவிர்க்க குடும்ப நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் அனைவரும் பேசி ஒருமித்த மனநிலைக்கு வர வேண்டும். குடும்பம் சந்தோஷமாக செல்லும்.
உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு மிகவும் தைரியம் அதிகம் தான். ஆனால் இக்காலத்தில் சற்று மனபயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. யோகா, ஆன்மீகம் போன்ற வழிகளில் ஈடுபாட்டுடன் செல்லவும். உங்களது சகோதர பாவமானது பலவீனப்பட்ட சூழ்நிலையில் உள்ளதால் சற்று பொறுத்திருந்து கவனித்து பார்க்கவும். அவர்களுடன் எவ்விதமான அதிமுக்கியமான பேச்சுவார்த்தைகளும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
நான் நன்றாக இருக்கிறேன்! நீங்க நல்லா இருக்கிறீர்களா? என்ற அளவில் உறவுமுறைகளை கையாண்டு வந்தால் நல்லதே நடக்கும். உங்களது தாய் ஸ்தானத்திற்கு சனி பகவான் பார்வை விழுகிறது. தாயின் ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றாலும் உடல் அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் வயதானவர்கள் இருந்தால் தக்க மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும். தாய்க்கு ரத்தம், எலும்பு, சதை சம்பந்தப்பட்ட இனங்களில் பிணி, பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தாய்- மக்கள் உறவு முறை சீர்படும்.
உங்களது வீடு. மனை ஸ்தானமானது இருப்பதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகள் ஏதும் தொடங்க வேண்டாம். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். உங்கள் வண்டி, வாகன ஸ்தானத்தை பொருத்தவரை சனி பார்வை இருப்பதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எல்லை தெய்வங்களுக்கு வாகனங்களை வைத்து பூஜை போட்டுக் கொள்ளவும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கு இது உகந்த காலம் அல்ல. வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடம் சற்று வலுவாக உள்ளதால் கிரகப்பெயர்ச்சிகளால் ஏற்படும் அசுப பலன்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் சூழ்நிலை உள்ளது. இருந்தாலும் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வரவும். உங்கள் புத்திர பாக்கியத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சற்று காலம் பொறுத்திருக்க வேண்டும்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் தகுந்த பரிகாரங்கள் செய்து கொள்ளவும். அல்லது எங்களிடம் கிடைக்கும் ஸ்ரீ குரு யந்திரத்தை வாங்கி வழிபட்டு வந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். உங்கள் குழந்தைகளின் ஆயுள் நிலை, உடல் நிலை, கல்வி நிலை மேம்படக்கூடிய சூழ்நிலை உண்டு.
உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்தில் குரு அமர்வது நல்லதல்ல. கடன்கள் கூடும் நேரமாகும். இந்த கடனை சுபச் செலவுகளாக மாற்றுவதற்கு யோசனை செய்து கொள்ளவும். மேலும் கொடுக்கல், வாங்கல்களில் சிறிது சிக்கல் ஏற்படும். உங்களது உடம்பை பொருத்தவரை நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளும், புத்தி சம்பந்தப்பட்ட கோளாறுகளும் வந்து நீங்கும்.
உங்களது திருமண பாவத்தை பொறுத்தவரை உங்களுக்கு இப்பொழுது குரு பலம் இல்லை. ஆகவே அடுத்த வருடம் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் திருமண தோஷம் உள்ளவர்கள் திருமணஞ்சேரி சென்று பரிகாரம் செய்து கொள்ளவும். திருமணமான தம்பதியர்களுக்கு நடுவில் சற்று கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அது பெரிய விளைவுகளை ஏதும் ஏற்படுத்தாது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டால் நல்லதே நடக்கும்.
உங்களது மாங்கல்ய ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு கேது பகவான் அமர்ந்துள்ளார். ஆகவே வெள்ளிக்கிழமை தோறும் ராகு பூஜையில் கலந்து கொள்ளவும். உங்கள் சத்ரு ஸ்தானம் விருத்தியாக கூடிய சூழ்நிலையில் உள்ளதால் போதுமானவரை வெளியாட்கள் பிரச்சனைகளுக்கு செல்லாமல் அமைதியாக இருந்து விடுவது நல்லது.
உங்களது பாக்கியஸ்தானத்தைபொறுத்தவரை உங்கள் தந்தையாரின் ஆயுள் பாவம் நன்றாக உள்ளது. தந்தை- மக்கள் உறவு முறை சீராக இருக்கும். தந்தையின் உடல்நலையில் நெஞ்சு சளி மற்றும் கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய் தாக்குதல் உண்டு. தந்தை வழி சொத்துக்களில் இருக்கக்கூடிய வில்லங்கங்கள் தீர்ந்துவிடும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை தடைபட்ட கல்வியை தடையில்லாமல் தொடர வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் படிக்கும் படிப்பிற்கான கல்லூரி கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கும். சமயோஜித புத்தி தேவை.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இங்கு குரு பகவான் பார்வை விழுகிறது.விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும், மருத்துவத்துறையினருக்கு மாற்றம் தரும் வேலையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் அகலுவதும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு காலம் கைவிடுவதும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு உத்தியோக உயர்வும், வேலையில்லாதவர்களுக்கு வேலையும் கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி பகவானின் பார்வை உள்ளது. பொருளாதாரத்தில் வருமானம் என்பது சரியாக வந்தாலும் புறச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப செலவும் அதிகமாக இருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. ஆனால் அடுத்தவர்கள் பார்வைக்கு நன்றாக பிழைக்கிறோம் என்றே தெரியும். நமக்கு தானே தெரியும் சூழ்நிலை என்னவென்று? ஆகவே பண ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் வாழ்க்கை சூழலை சரியாக திட்டமிட்டு நடத்த வேண்டும்.
உங்களது அயன, சயன ஸ்தானத்தை பொறுத்த வரை குரு, சனி, ராகு,கேது ஆகிய கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத சூழ்நிலையில் உள்ளது. குரு பார்வை ஒன்றே உங்களது தொழிலை காபந்து செய்கிறது. இந்த குரு பெயர்ச்சி காலம் சற்று சிக்கல்களை ஏற்படுத்தினாலும் அடுத்த வருடம் வரக்கூடிய குரு, சனி பெயர்ச்சிகள் உங்களை உயர்வான பாதைக்கு அழைத்துச் செல்ல காத்திருக்கின்றன. அதற்கான தேர்வு நேரம் தான் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் ராசி அதிபதி சனி பகவானின் அதி தேவதையான ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி வர அல்லல்கள் அகலும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலத்தில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், திருநள்ளாறு, ஏரி குப்பம், குச்சனூரில் உள்ள சனி பகவானுக்கு பிரீதி செய்வதும், காளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு, கேதுகளுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், ஏழை குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும், நூல்களில் கோளறு பதிகம் பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரித்த குரு பகவான் 11/5/2025 முதல் 5ஆம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார். அவர் அங்கிருந்து 9, 11, 1 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் ஜென்மத்தில் அமர்ந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் வரும் 26/4/2025 முதல் 1, 7 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எவ்வித பலன்களை தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இங்கு சனி, ராகு ஆகிய இருவரும் அமர்ந்து குருபகவான் பார்வையிடுகிறார். ஆகவே உங்கள் உடல் அமைப்பை பொருத்தவரை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனம் சோர்வடையும். நிலையில்லாத ஒரு அமைப்பு உருவாகும்.
நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்று நடக்கும். குடும்ப சூழ்நிலைகளால் மனம் பித்து பிடித்தது போல் காணப்படும். ஆகவே இவற்றை தவிர்க்க முயல வேண்டும். உங்கள் ராசிநாதனான சனி பகவானுக்கு சனிக்கிழமை தோறும் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும். உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை ஓரளவு பணரீதியாக நல்ல பலன்கள் காணப்படும். சுப காரிய செலவுகள் ஏற்படும். நல்ல விஷயங்களுக்காகவும், ஆன்மீக திருப்பணிக்காகவும் உங்களது பொருளாதாரத்தை செலவிடுவீர்கள்.
உங்களது வாக்கு ஸ்தானத்தைப் பொறுத்தவரை பலவீனப்பட்ட சூழ்நிலையில் உள்ளதால் வாக்கு கொடுப்பதில் எச்சரிக்கை தேவை. நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் ஒரு சில சுயநலப் போக்கு ஒளிந்துள்ளது என்பதை அறியவும். இதை தவிர்க்க முயலுங்கள்.
உங்கள் குடும்பஸ்தானத்தை பொருத்தவரை மிகவும் விருத்தியாக உள்ளது. குடும்பம் சந்தோஷத்துடன் செல்லும். அதே போல் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த கால சூழ்நிலையிலிருந்து விடுபட்டு புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை சனி பகவான் பார்வை உள்ளது. என்னதான் உங்களுக்கு சனி ராசிநாதன் ஆனாலும் அவர் பார்வை பலத்தால் உங்களுக்குள் தைரியத்தை இழக்க வைக்கும். அதேபோல் மன பயத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
உங்கள் சகோதர பாவத்தை பொறுத்தவரை பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. தேவையான செயல்களுக்கு மட்டும் அவர்களிடம் ஆலோசனை கேட்கவும். உங்கள் தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுளுக்கு பங்கம் கிடையாது. தாயின் உடல்நலையில் மறைவிட உறுப்புகள், சூடு, வெப்பம் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி, பீடைகள் ஏற்படும். தாய்- மக்கள் உறவு முறை சீராக இருக்கும். தாயால் ஒரு சிலர் ஆதாயம் அடைவீர்கள்.
உங்களது வீடு, மனை வாகனத்தை பொருத்தவரை இருப்பதை அப்படியே வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சிலருக்கு வீட்டுக் கடன்கள் முற்றிலும் தீருவது போல் தெரியும். புதிய மனைகள் வாங்க இது தக்க தருணம் அல்ல. உங்கள் வண்டி, வாகன ஸ்தானமானது சற்று சுமாராக உள்ளது. புதிய வாகனங்கள் ஏதும் வாங்க வேண்டாம். அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். வாகனங்களில் பயணம் செய்யும் போது எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்தில் குரு அமர்ந்திருக்கிறார். மிகவும் நல்ல காலமாகும். புண்ணிய பலம் பெருகி பாவ பலம் குறையும். நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். ஜாதகத்தில் புத்ரதோஷம் இருப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும்.
உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை நன்றாக இருக்கும். அவர்களால் உங்களுக்கு சந்தோசமான விஷயங்கள் நிச்சயம் நடக்கும். உங்களது கடன் ஸ்தானத்தை பொருத்தவரை கடன்கள் கட்டுக்குள் வரும் காலமாகும். புதிய கடன்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்தாலும் அதை சுபச் செலவுகளில் செலவிடவும். உங்களுக்கு கடனால் எந்த அவதியும் கிடையாது.
உங்களது ரோகஸ்தானத்தை பொருத்தவரை மனரீதியான பாதிப்பு மற்றும் கை, கால் உளைச்சல், ரத்தம் சம்பந்தப்பட்டவற்றால் ஏதாவது நோய் தொற்றுகள் ஏற்படும். உங்களது திருமண பாவத்தை பொருத்தவரை இவ்விடத்தில் கேது பகவான் அமர்ந்துள்ளார். உங்களுக்கு 5ல் குரு அமர்ந்து திருமண பலம் கொடுத்தாலும், கேது பகவான் சில தடங்கல்களை ஏற்படுத்துவார். ஆகவே திருப்பாம்புரம் சென்று ராகு, கேதுவை வழிபட்டு வரவும். பரிகாரம் தேவையில்லை.
திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். திருமணமான தம்பதியர்களுக்கு மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் | செய்யும். அனுசரித்து செல்லவும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்க ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபட்டு வந்தால் வாழ்க்கை வளம் பெறும். உங்களது மாங்கல்ய ஸ்தானமானது பலமாக உள்ளது.
அதே போல் உங்களுக்கு ஆயுளும் விருத்தியாக உள்ளது. சத்துரு ஸ்தானத்தை பொருத்தவரை சத்ரு விருத்தி ஆகக்கூடிய சூழ்நிலை உள்ளதால் உறவுகளிடம், நண்பர்களிடம், அயலாரிடம் பேசும் போது அனாவசியமான சொற்களை உதிர்க்க வேண்டாம். வார்த்தையே சண்டையாக மாறும். ஜாக்கிரதை தேவை.
உங்களது பாக்யஸ்தானத்தைபொறுத்தவரை இவ்விடத்திற்கு குரு பகவான் பார்வை விழுகிறது. ஆகவே தந்தையாரின் ஆயுள் பாவம் விருத்தி தரும். தந்தை- மக்கள் உறவு முறை சீராக இருக்கும். தந்தையின் சொத்துக்கள் நல்ல முறையில் பிரித்துக் கொடுக்கப்படும். தந்தையின் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் தீர்ந்துவிடும். தந்தைக்கு வெப்பம், சூடு சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஏதாவது பிணி, பீடைகள் ஏற்படும்.
உங்களது உயர் கல்வி ஸ்தானத்தை பொருத்தவரை அருமையான ஒரு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எந்த கல்வியை கற்க நினைக்கின்றீர்களோ அந்த கல்வியை கற்பதற்கான கல்லூரி உங்களுக்கு கிடைக்கும். உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவான் பார்வை விழுந்துள்ளது.
ஆகவே விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மந்தமாகவும், மருத்துவத்துறையினருக்கு மந்தமான சூழ்நிலையும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இறுக்கம் தீருதலும், சுயதொழில் புரிவோருக்கு சுணக்கம் நீங்குதலும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு அலைச்சல் அதிகமாதலும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகமாதலும் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை குருபகவான் பார்வை விழுந்துள்ளது. இது ஒரு பொன்னான காலமாகும். கடந்த காலத்தை காட்டிலும் வரக்கூடிய நிகழ்காலம் ஒரு அற்புதமான யோகத்தை செய்யக் கூடியதாக இருந்தபோதிலும் உங்களுடைய பூர்வ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப லாபம் என்பது நிச்சயம் இந்த ஆண்டில் கிடைக்கும். கடந்த காலத்தில் புண்ணியம் செய்திருந்தால் சுப பலன்களும், பாவம் செய்திருந்தால் அசுப பலன்களும் நிச்சயம் உண்டு.
காரணம் உங்களுடைய ஜென்மத்தில் சனி, ராகு 7ம் இடத்தில் கேது இருக்கிறார்கள். மனசாட்சிக்கு பயப்பட வேண்டிய காலமாகும். உங்களது அயன, சயன ஸ்தானத்தை பொருத்தவரை நீண்ட காலத்திற்குப் பிறகு வரக்கூடிய காலங்களில் சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கின்றீர்கள். இது நீங்கள் மற்றும் உங்கள் மனைவி சம்பந்தப்பட்டது ஆகும். அதே சமயம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை அனுசரித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பிடிவாதம் கூடாது.
உங்கள் ராசி அதிபதி சனி பகவானின் அதி தேவதையான ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு வர விக்னங்கள் தீரும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திருநள்ளாறு, ஏரி குப்பம், குச்சனூர் ஸ்தலங்களில் உள்ள சனி பகவானுக்கு பிரீதி செய்வதும், திருப்பாம்புரம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ராகு, கேதுகளுக்கு அர்ச்சனை செய்வதும், வயது முதிந்தவர்களுக்கு வஸ்திரதானம் செய்வதும், ஏழை குழந்தைகளுக்கு கல்வி தானம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த குரு பகவான் 11/5/2025 முதல் 4ம் இடம் பெயர்ந்து பலன் தர உள்ளார் .அவர் அங்கிருந்து 8, 10, 12 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் 12 ல் அமர்ந்து2,6,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இராகு, கேதுக்கள் 26/4/2025 முதல் 12, 6 ஆகிய இடங்களுக்கு பெயர்ந்து தத்தம் இடங்களை மாறி பார்வையிடுகின்றனர்.
ஆக இந்த கிரக அமைப்புகள் உங்கள் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் எத்தகைய பலன்கள் தரும் என்று பார்ப்போம் வாருங்கள்!
உங்களது உடல் ஸ்தானத்தை பொருத்தவரை இப்பொழுது உங்களுக்கு ஏழரைச் சனியில் விரைய சனி நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகம் தென்படுவதால் நடக்கக்கூடிய செயல்கள் அனைத்தும் தடுமாற்றங்கள் நிறைந்ததாகவே இருக்கும். மனம் ஒரு நிலைப்படாது. எதிர்காலத்தை எண்ணி பலவாறாக சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இது தேவையில்லாத கற்பனையாகும். இன்று நமக்கு நேரம் சரியில்லை. ஆனால் வரும் காலம் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டும்.
உங்களது தனஸ்தானத்தை பொருத்தவரை இவ் வீட்டிற்கு சனிபகவான் பார்வை விழுவது பொருளாதாரத்தில் தடை ஏற்படுத்தும். என்னதான் நாம் அதிகமாக சம்பாதித்தாலும் செலவுகள் என்பது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும். இந்த செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. வருகின்ற வருமானத்தை தக்க வைக்க செலவுகளை சுருக்கிக் கொள்ள வேண்டும்.
உங்களது வாக்கு ஸ்தானமானது பலவீனப்பட்ட சூழ்நிலையில் உள்ளது. தவளையும் தன் வாயால் கெடும் என்பது உங்களுக்கு பொருந்தும். கூடுமானவரை அமைதியாக இருப்பது நல்லது. வீண் விவாதம் வேண்டாம். உங்களது குடும்பத்தை பொறுத்த வரை குழப்பமான சூழ்நிலை உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு நாம் தான் காரணம் நாம் குழம்பிஇ நம் குடும்பத்தில் இருப்பவர்களையும் குழப்பி விட வேண்டாம். தெளிவான பார்வை வேண்டும். அதற்கு ஒருமித்த மனநிலை வேண்டும்.
உங்களது தைரிய ஸ்தானத்தை பொருத்தவரை அருமையாக உள்ளது. எது எப்படி இருப்பினும் அதை சமாளிக்க கூடிய தகுதி உங்களுக்கு வந்து விடும். இது நீங்கள் செய்த பூர்வ புண்ணிய பலன்களால் ஆனது. உங்கள் சகோதர, சகோதரி வகையில் பிணக்குகள் உருவாகும். வீண் விவாத பேச்சு வேண்டாம். போதியவரை பேச்சை குறைத்து செயல்களில் வீரியத்தை காட்ட வேண்டும்.
உங்களது தாய் ஸ்தானத்தை பொருத்தவரை தாயின் ஆயுளுக்கு எவ்விதத்திலும் பங்கம் கிடையாது. ஆனால் தாயின் உடல் நிலையில் நரம்பு, எலும்பு மற்றும் சதை சம்பந்தப்பட்ட அமைப்புகளால் பிணி, பீடைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் தாய் -மக்கள் உறவு முறை சீராக இருக்கும். சிலர் தாயால் ஆதாயம் அடைவார்கள். உங்களது வீடுஇ மனையை பொருத்தவரை ஒரு சிலருக்கு வீடு அல்லது மனை வாங்க கூடிய யோகம் உருவாகும். இது விரைய சனியால் ஏற்படுவது ஆகும். வீடு மராமத்து செய்வது மற்றும் மனைகள் வாங்கி போடுவது நல்லது.
உங்களது வண்டி, வாகன ஸ்தானத்தை பொருத்தவரை ஏழரைச் சனியின் பிடியில் இருப்பதால் புதிய வாகனங்கள் ஏதும் வாங்க வேண்டாம். வாகனங்களில் இருக்கும் பழுது செலவுகளை நீக்கிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். வாகனங்களை வைத்து எல்லை தெய்வங்களுக்கு பூஜை போட்டுக் கொள்ளவும். வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கை தேவை.
உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொருத்தவரை இந்த இடத்திற்கு பலம் அதிகமாக உள்ளது. உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் பாவ பலம் குறைந்து புண்ணிய பலம் அதிகரிக்கும். நீண்ட காலமாக புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு அடுத்த வருடம் நிச்சயம் குழந்தை பிறக்கும்.
ஜாதகத்தில் புத்திர தோஷம் இருப்பவர்கள் தகுந்த பரிகாரங்களை செய்து கொள்ளவும்.
உங்கள் குழந்தைகளின் கல்வி நிலை, உடல்நிலை நன்றாக உள்ளது. உங்களது ரோக ஸ்தானத்தை பொருத்தவரை உடம்பில் இனம் புரியாத கிருமிகளால் நோய் ஏற்படக்கூடிய தன்மை உண்டு. ஆகவே நீரை காய்ச்சி குடிக்கவும். உங்கள் கடன் ஸ்தானமானது வலுவிழந்த சூழ்நிலையில் உள்ளதால் கடன்கள் கட்டுக்குள் வரும் நேரமாகும். கேது இவ்விடத்தில் அமர்ந்து இருப்பது இறை ரீதியாக பணவரவில் சிக்கல்களை ஏற்படுத்தாது. இது ஒரு நல்ல பாவமாகும்.
உங்கள் திருமண ஸ்தானத்தை பொருத்தவரை இப்பொழுது உங்களுக்கு குரு பலம் இல்லை. அடுத்து வரும் குரு பெயர்ச்சி காலத்தில் திருமண நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாம். ஜாதகத்தில் திருமண தோஷம் இருந்தால் தக்க பரிகாரங்களை திருமணஞ்சேரி சென்று செய்து கொள்ளவும். திருமணமான தம்பதியர்களுக்கு மத்தியில் சில விதத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. இருந்த போதிலும் குரு பகவானின் அருட்பார்வை மாங்கல்ய ஸ்தானத்திற்கு விழுவதால் பெரிய விளைவுகள் ஏதும் இருக்காது. கணவன் மனைவி இடையே யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது.
உங்கள் மாங்கல்ய ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை விழுவதால் மாங்கல்யத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு கிடையாது. அதேபோல் உங்கள் ஆயுளுக்கும் தீர்க்கம் உண்டு. உங்கள் சத்துரு ஸ்தானமானது பலப்படும் சூழ்நிலை உள்ளதால் உறவினர்களாகட்டும், நண்பர்களாகட்டும், அல்லது வெளி ஆட்கள் ஆகட்டும் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. கூடவே இருப்பவர்கள் குழி பறிப்பார்கள்.
உங்களது பாக்யஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு சனி பகவான் பார்வை விழுகிறது. ஆகவே தந்தையாரின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. அவருக்கு ரத்தம், சதை, எலும்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படும். மேலும் தந்தையாரின் ஆயுள் பாவம் தீர்க்கம் பெரும். தந்தை- மக்கள் உறவு முறை சீர் பெறும். தந்தையாரின் சொத்துக்களில் இருந்த வந்த வில்லங்கங்கள் நீங்கும்.
உங்கள் உயர் கல்வி ஸ்தானமானது பலமற்ற சூழ்நிலையில் உள்ளத்தால் அதி தீவிர பிரயாத்தனத்துடன் கல்வியை தொடர வேண்டும். இல்லையெனில் தடை பட்டுவிடும். இந்த நிலை மாற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் அல்லது கூத்தனூர் சரஸ்வதியை வழிபட்டு வர அனைத்தும் சுபமாகும்.
உங்களது ஜீவனஸ்தானத்தை பொருத்தவரை இவ்விடத்திற்கு குரு பகவான் பார்வை விழுவது மிகவும் நல்லது. விவசாயத் துறையினருக்கு விளைச்சல் மிதமாகவும், மருத்துவத்துறையில் இருப்போருக்கு இருப்பிட மாற்றமும், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினருக்கு இன்னல்கள் விலகுவதும், சுயதொழில் புரிவோருக்கு அரசாங்க கடன் உதவிகளும், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலும், அரசு மற்றும் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு துறை ரீதியான மாற்றமும் ஏற்படும்.
வேலையில்லாதவர்களுக்கு சிரமத்தின் பேரில் வேலை கிடைக்கும்.
உங்களது லாப ஸ்தானத்தை பொருத்தவரை சற்று பலம் குறைந்தே காணப்படுகிறது. லாபம் என்பது பணம் மட்டும் கிடையாது. குடும்ப நலன், பண வரவு, வியாபாரம் போன்றவற்றில் சீரான நிலை இருப்பதே லாபம் ஆகும். இப்பொழுது ஏழரை சனி என்பதால் கொஞ்சம் கடினமான சூழ்நிலையே தொடரும். ஒரு சிலருக்கு மட்டும் தசா புத்தி ரீதியாக நல்ல பலன்கள் காணப்படும்.
இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் செலவுகளை சுருக்கி சரியாக திட்டமிட்டு வாழ்க்கை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத்தை நீங்கள் சமாளிக்க முடியும். உங்களது அயன, சயன ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் ராசிக்கு சனி, ராகு, குரு ஆகிய கிரகங்கள் சாதகமற்ற சூழ்நிலையிலும், கேது ஒருவரே சாதகமான சூழ்நிலையிலும் உள்ளார்கள்.
தேவையில்லாமல் செலவழிப்பது, தேவையில்லாமல் பேசுவது போன்றவற்றை தவிர்க்கவும். உங்கள் ராசி அதிபதி குரு பகவானின் அதி தேவதையான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கி வர தடங்கல்கள் விலகும். நல்லதே நடக்கும்! வாழ்க வளமுடன்!!
பரிகாரம் : திட்டை, ஆலங்குடி, பட்டமங்கலம் சென்று குரு பகவானுக்கு வழிபாடு செய்வதும், திருநள்ளாறு. ஏரி குப்பம், குச்சனூர் சென்று சனி பகவானுக்கு பிரிதி செய்வதும், திருப்பாம்புரம், காளகஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்வதும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவதும், நூல்களில் கோளறு பதிகத்தை பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.
