முதலியார் சங்கங்கள் காணாமல் போவது ஏன்?- அப்பு பாலாஜி விளக்கம்
முதலியார் சங்கங்கள் பின்நோக்கி செல்ல அரசியல் ஈடுபாடே காரணம் என அக்டோபர் 24 இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அப்பு பாலாஜி கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் மருது பாண்டியர்கள் குரு பூஜை எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
காளையார் கோவில்
விருதுநகர் மாவட்டம் முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் சேர்வையின் மகன்களான பெரிய மருது பாண்டியர், சின்ன மருது பாண்டியர் ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது.
அரசு விழா
அக்டோபர் 24ஆம் தேதி மருது பாண்டி சகோதரர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்குலத்தோர் மற்றும் அகமுடையர் சங்கங்களின் சார்பில் ஒவ்வொரு வருடமும் இவர்களது குருபூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நோட்டு-புத்தகங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, அஸ்வநாதசுரணை, கடலாடி, போளூர், குன்னத்தூர், ஆரணி, எஸ்.வி.நகரம் உள்பட பல்வேறு இடங்களில் மருது பாண்டியர்கள் குரு பூஜை நடைபெற்றது. அஸ்வநாதசுரணையில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மணி ஏற்பாட்டின் படி ஏராளமான இளைஞர்கள் மருது பாண்டியர்கள் உருவம் பொறித்த டி ஷர்ட் அணிந்து மருது பாண்டி சகோதரர்களின் உருவ படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர். தமிழக தலைமை அகமுடைய சங்க கொடியேற்றப்பட்டது. பிறகு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அன்னதானம்
கடலாடியில் சமுதாயத் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குரு பூஜையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னத்தூரில் தமிழக தலைமை அகமுடைய சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு ஏராளமான இளைஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சிலைகள் ஊர்வலம்
ஆரணி அகமுடையர் சங்கத்தின் தலைவர் பி.எம்.ஜி.பிரபு தலைமையில் மருது பாண்டியர்களின் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகள் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போல் ஆரணி எஸ்.வி நகரத்தில் முரளி, நவீன்குமார் ஆகியோரது ஏற்பாட்டின் படி நடைபெற்ற குருபூஜையில் மருது பாண்டி சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.


300 இளைஞர்கள்
மேற்கண்ட விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக தலைமை அகமுடைய சங்கத்தின் ஆலோசகரும், வழக்கறிஞருமான ப.கி.தனஞ்செயன், வழக்கறிஞர் கோமளவல்லி, இளைஞரணி தலைவர் இமயவரம்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போளுரில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குரு பூஜையில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
அப்பு பாலாஜி
இங்கு சிறப்பு விருந்தினராக அக்டோபர் 24 இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், வேலூர் பிரபல தொழிலதிபருமான அப்பு பாலாஜி கலந்து கொண்டு போளூர் பஸ் நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது,

அரசியல் ஈடுபாடு
நாங்கள் எல்லாம் சமுதாய உணர்வோடு 20 வருடமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் மருது பாண்டியர்கள் உருவத்தை வெளிக்கொண்டு வந்த பிறகு இளைஞர் படை எங்களுடன் வர ஆரம்பித்தது. எத்தனையோ முதலியார் சங்கங்கள் உருவானது அவைகள் எப்போது பின்னோக்கிச் சென்றது என்றால் அரசியல் ஈடுபாடு அதில் வரும் போது தான் முதலியார் சங்கங்கள் பின்னோக்கி சென்றது.
இளைஞர்கள் வரவேண்டும்
நம் சமுதாயத்தை பாதுகாக்க இளைஞர்கள் வெளியே வரவேண்டும் என்ற எண்ணத்தில் தான் அக்டோபர் 24 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எதிரில் நிற்பவன் நல்லவன் என்றால் நம்மை போன்ற நல்லவர்களை அவன் பார்க்கக் கூடாது. எதிரில் நிற்பவன் கெட்டவன் என்றால் நம்மை போல் கெட்டவனை அவன் பார்க்கக் கூடாது. இது மட்டும் தான் உங்கள் உணர்வாக இருக்க வேண்டும். அகமுடையன் வாழ வைத்தான் என்பது சரித்திரமே தவிர அழித்ததாக சரித்திரம் கிடையாது.
ரத்தத்தில் வீரம்
தென் மாவட்டங்களில் பிரமிப்பாக கொண்டாடப்பட்டு வந்த மருது பாண்டியர் குருபூஜை 3, 4 ஆண்டுகளாக வட மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அதே சமயம் இந்த எழுச்சியை இளைஞர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. அகமுடைய இளைஞர்களை ரவுடி முகமாகவோ, வாழ்வை தொலைக்கும் முகமாகவோ பார்க்க நாங்கள் விரும்பவில்லை. மருது பாண்டியர்கள் வரலாற்றைப் படிக்கும் போது உங்களுடைய ரத்தத்தில் வீரம் பிறக்கும்.
வாழ்ந்ததற்கு அர்த்தம்
நம் சமுதாய மக்களுக்கு பிரச்சனை என்றால் இளைஞர்கள் வெளியே வர வேண்டும். மற்ற சமுதாயங்கள் எப்படி வளர்ந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இளைஞர்கள் எல்லாம் வெளியே வந்து விட்டீர்கள் என்பதே நாங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தம் ஆகும்.
பக்கபலமாக இருப்போம்
நம் சமுதாய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு காலத்தில் நாலு ஐந்து பெண் பிள்ளைகள் இருந்தனர். தைரியமாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற நம் சமுதாய பெண்களுக்கு அரணாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை அகமுடைய சங்கத்தின் ஆலோசகரும், வழக்கறிஞருமான ப.கி.தனஞ்செயன், வழக்கறிஞர் கோமளவல்லி, இளைஞரணி தலைவர் இமயவரம்பன், போளுர் சாரதி மற்றும் பலர் பேசினார்கள்.
பைக் பேரணி

திருவண்ணாமலையில் அகமுடையர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பிறகு பெரிய தெரு மேட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தலைவர் என்.செல்லதுரை, தொழிலதிபர் ஏ.சிவஞானம், வி.தனுசு, ந.ராஜவேல், ஆறுமுகம், இரா.அருண்குமார், தாரா இரா.அருள், நாகா.செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.