Homeசெய்திகள்அதிகாரியை பகைத்துக் கொண்டதால் ஊராட்சியில் பயனற்று கிடக்கும் ரூ.1.50 கோடி

அதிகாரியை பகைத்துக் கொண்டதால் ஊராட்சியில் பயனற்று கிடக்கும் ரூ.1.50 கோடி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பழையனூரில் எந்த வித பயனுமின்றி ரூ.1கோடியே 50லட்சம் முடங்கி கிடக்கிறது. அதிகாரியுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக இந்த பணம் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி துறையில் நடைபெற்ற ஊழல்களை ஒரு பக்கம் பா.ஜ.கவும்¸ மற்றொரு பக்கம் காங்கிரசும் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து கோர்ட்டில் சந்தித்து கொள்ளலாம் என திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சென்ற மாதம் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டத்தில் ஆரணி எம்.பி விஷ்ணுபிரசாத் பகிரங்கமாக தெரிவித்தார். 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாதுரை எம்.பி குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்ல தயங்கமாட்டோம் என கூறியிருந்தார். ஆனால் யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பழையனூரில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தாமல் அதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரூ.1கோடியே 50லட்சம் முடங்கி கிடப்பது திருவண்ணாமலை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தெரியவந்துள்ளது. 

திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோவில் தெருவில் உள்ள லோட்டஸ் மகாலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவரும்¸ ஆருத்திராப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவருமான ஆர்.ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஏ.ராஜன்¸ மாநில பொருளாளர் வயலூர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கே.எம். பழனி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் எஸ்.எம்.முனியாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு

இதில் பேசிய பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் துர்காதேவியின் கணவரும்¸ அமமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான வெங்கடேசன், பழையனூரில் பழைய பள்ளி கட்டிடம் திருமண மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டும்¸ அதற்கு ரூ.15லட்சம் ஒதுக்கி தீர்மானம் போட சொல்லி ஏ.டி(உதவி இயக்குநர்) அரவிந்த் கூறியிருந்தார். திருவண்ணாமலையிலிருந்து ஒப்பந்ததாரரும் வந்து கேட்டார். குடிக்கவே தண்ணீர் இல்லை. கிராமத்திற்கு கார் பார்க்கிங் முக்கியமா? என கேட்டேன். லட்டர் கொடுங்க¸ உங்களுக்கு என்ன பர்சன்டேஜ் சொல்லுங்க கொடுக்கிறோம் என்றனர். எங்க ஊரில் வேலை செய்ய நீங்கள் யார் என கேட்டு திருப்பி அனுப்பி விட்டோம். கேட்ட வேலையை கொடுக்க மாட்டீர்களா¸ பார்த்துக் கொள்ளலாம் என ஏ.டி கூறிவிட்டார். அதிலிருந்து அவருக்கும்¸ எங்களுக்கும் பிரச்சனை. எங்கள் பஞ்சாயத்தில் குவாரி நிதி ரூ.68லட்சம்¸ பொது நிதி ரூ.43லட்சம்¸ 14வது நிதி குழு நிதி ரூ.33லட்சம் உள்ளது. இதைக் கொண்டு எங்கள் பஞ்சாயத்தில் கால்வாய்¸ மேநீர் தேக்கத் தொட்டி¸ தார்சாலை¸ சுடுகாட்டு பாதை¸ தெருவிளக்கு¸ மாதிரி பள்ளி¸ பள்ளி சுற்றுச் சுவர்¸ நெற்களம் போன்றவைகளை ஏற்படுத்த ஒரு வார்டு மெம்பர் கூட எதிர்ப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால் இவை நிராகரிக்கப்பட்டு விட்டது. 47 ஆண்டு காலம் எங்கள் ஊரில் தேர் ஓடாததால் ரூ.17லட்சத்தில் புதிய தேர் செய்யப்பட்டு கடந்த மாசி மாத திருவிழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேர் போகும் சாலை சரியில்லை¸ கான்கிரீட் சாலை போட சொல்லி பொதுப்பணித்துறையினர் சொல்லி விட்டனர். இதற்காக ரூ.25லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பியும் உத்தரவு வரவில்லை. இதனால் இந்த மாசி மாத திருவிழாவில் தேர் ஒடுமா என தெரியவில்லை. பெண்கள் முன்னேற வேண்டும் என சொல்லுகின்றனர். ஆனால் பெண்கள் தலைவராக இருக்கும் பஞ்சாயத்தில் முட்டுக்கட்டை போடுகின்றனர். இந்த பதவியில் இருப்பதற்கு 4¸5 கழுதைகளை வாங்கி மேய்க்கலாம். பிரச்சனை இருக்காது என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். 

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு

மாநில தலைவர் எஸ்.எம்.முனியாண்டி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கிராம சபை கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது வருத்தத்திற்குரியது. 3 ஆண்டு காலம் தனி அலுவலர் பதவி வகித்தது இன்னும் தொடர்கிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் பயனில்லை. ஊராட்சிகள் கோமா நிலையில் உள்ளது. அடிப்படை¸ அத்தியாவசிய பணிகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க அரசு தனி கவனம் செலுத்தி ஊராட்சிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக் கொண்டார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!