போதை பொருளின் மூலதனமாக தமிழகம் விளங்கி வருகிறது, பட்டா கத்தியுடன் வந்து வியாபாரிகளை வெட்டுகிறார்கள் என்று வியாபாரிகள் சங்க பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் புரட்சி மாநாடு திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேரவையின் மாநிலத் தலைவர் அ.முத்துகுமார் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
இந்த 2025-ல் 100 ரூபாய் நன்கொடையில் மாநாடு நடத்தக்கூடிய ஒரே அமைப்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தான். 50 ஆயிரம், 1 லட்சம், 5 லட்சம் கொடு என்று கேட்ட வரலாறே கிடையாது. எந்த காலத்திலும், எந்த சூழலிலும் எந்த ரெய்டும் எனக்கு வராது. களப்போராளியாக செயல்பட்ட காரணங்களால் தான் தென் மாவட்டங்களில் இருந்து மிகச் சிறப்பாக வருகை தந்து ஆதரவு கொடுக்கிறார்கள்.
இன்றைக்கு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள், வணிகர் தினம் என்றால் வசூல் மூலம் கொள்ளை அடிக்கிறார்கள் என்று. கொள்ளையடிப்பவர்களை இந்த சமுதாயம் கண்ணும், கருத்துமாக கவனிக்க வேண்டும். கோயமுத்தூரில் சென்ற ஆண்டு மாநாடு நடத்தினோம். 8 லட்சம் கடன்பட்டோம். இன்று வரை வட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தியாகம் செய்து மாநாட்டை நடத்துகிறோம்.
நீ இதை செய்தாய், இந்த வழி தவறு என்று யாரும் எங்களை கை நீட்டி சுட்டிக் காட்ட முடியாது. எந்த வகையிலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காவல் நிலையத்திலும் ஒரு எப்.ஐ.ஆர் இல்லை. ஊழல் செய்தேன், கடத்தல் செய்தேன், கட்டப்பஞ்சாயத்து செய்தேன் என்ற வரலாறே கிடையாது. தியாகம், செயல்பாடு அதை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த தமிழகத்தில் வணிக சமுதாயம், வியாபார சமுதாயம் என்றால் அது தமிழ்நாடு வியாபாரம் சங்க பேரவை மட்டும்தான் இருக்கும். மற்ற அனைத்தும் துடைத்து எறியப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில பொதுச் செயலாளர் கே.சி.ராஜா, மாநில பொருளாளர் சி.பொன்னுசாமி, கீழ்பென்னாத்தூர் தொகுதி செயலாளர் க.சா.முருகன் மற்றும் பல நிர்வாகிகள் பேசினார்கள்.
கூட்டம் முடிந்ததும் மாநிலத் தலைவர் முத்துகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தர்பூசணி விஷயத்துக்காக விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினோம். ஒரு சுகாதார அதிகாரி தர்பூசணியில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி விற்கிறார்கள் என்று ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். இருபது ரூபாய்க்கு விற்ற தர்பூசணி மூன்று ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு ஆள் இல்லை. அந்த விவசாயிகள் எல்லாம் தத்தளித்து போய் இருக்கிறார்கள்.
நாட்டில் என்னென்னமோ நடக்குது, என்னென்னவோ வணிகம் செய்கிறார்கள். எதுக்குமே அதிகாரிகள் வரவில்லை. அந்த சுகாதார அதிகாரி, அயல்நாட்டு அந்நிய முதலீடுகளை சோதனை செய்வது கிடையாது. ஹோட்டல், டி கடைகளில் கேமராக்களோடு சென்று வணிகர்களை கேவலப்படுத்தினர்.
தவறு நடந்தது என்றால் சுட்டிக்காட்டி வழக்கு போடுங்கள். கடைசியில் விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறார்கள். தர்பூசணிக்காக போராட்டம் நடத்தினோம். உடனடியாக அதிகாரியை மாற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இப்போது போதை கலாச்சாரமாக உள்ளது. கஞ்சா, கோகோயினை பயன்படுத்தி பட்டா கத்தியுடன் கடைக்கு வந்து மாமூல் தரவில்லை என்றால் வெட்டுகிறார்கள். கொலையும் நடந்திருக்கிறது. எனவே வியாபாரிகளுக்கு பெரிய சட்ட பாதுகாப்பு தர வேண்டும், இச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை விசாரணை இல்லாமல் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.
42 வருடமாக சங்கம் நடத்துகிறோம். எத்தனையோ முதல்வர் இருந்திருக்கிறார்கள். எந்த முதல்வராக இருந்தாலும் எல்லா சங்கங்களையும் அழைத்து ஆலோசனை நடத்துவார்கள். இந்த அரசாங்கம் மட்டும் தான் ஒரே ஒரு சங்கத்தை கைக்குள் வைத்திருக்கிறார்கள். வேறு யாரையும் அவர்கள் மதிப்பதும் இல்லை, கூப்பிடுவதும் இல்லை. அரசு பதிவு செய்த சங்கங்களை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
இது தேர்தல் காலம், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையை பொறுத்தவரையில் எங்கள் பிரதிநிதியும் சட்டமன்றத்தில் சென்று குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறோம். எங்கள் பிரதிநிதி ஒருவர் இருந்தால் தர்பூசணி விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டதை சட்டமன்றத்தில் பேசியிருப்பார்.
எத்தனை எம்எல்ஏ இருந்தார்கள்? ஒருத்தர் கூடவா விவசாயம் செய்யவில்லை? ஒருத்தரும் சட்டமன்றத்தில் இது பற்றி பேசவில்லை. எங்களுக்கென்று ஒரு பிரதிநிதி இருந்திருந்தால் பேசி இருப்பார்கள். எந்த அரசியல் கட்சி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பிரதிநிதியை சட்டசபைக்கு அனுப்ப தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு எங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பொதுச் செயலாளர் கே.சி.ராஜா கூறியதாவது,
எந்த ஏரியாவில் எவ்வளவு பான்மசாலா, பான்பராக் வேண்டும்? எந்தெந்த தொகுதியில், எந்தெந்த வட்டத்தில் வேண்டும்? எத்தனை டன் வேண்டும்? எல்லா இடத்திலும் இருக்கிறது. கட்சிக்காரர்களுக்கு எங்கு இருக்கிறது என்று தெரியும்.
திருவண்ணாமலை 10 இடத்தில் காட்டுகிறேன், சென்னையில் 1000 இடத்தில் காட்டுகிறேன். போதைப்பொருள் உலகத்துக்கே மூலதனமாக இருப்பது தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருந்துதான் போதை பொருள் செல்கிறது.
தமிழ்நாட்டில் தினம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது. பாலியல் வன்முறைகள் நடக்கிறது. தமிழ்நாடு போலீசின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. அவர்களை சுதந்திரமாக விட்டால் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Link:-http://www.youtube.com/@AgniMurasu