தீபத்திருவிழாவிற்கு 27 பொது இடங்களில் அன்னதானம் வழங்க இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. 26ந் தேதி கடைசி நாளாகும்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தீப திருவிழா 24.11.2022 முதல் தொடங்கி 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6 அன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திபத்திருவிழாவின் போது அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மண்டபங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட 27 பொது இடங்களின் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
27 இடங்கள் வருமாறு:-
1. திரௌபதி அம்மன் கோயில் அருகில், 2. செங்கம் சாலை சந்திப்பு அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 3. ஆனாய்பிறந்தான் – தூர்வாசர் கோயில் அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 4. ஆனாய் பிறந்தான் – விநாயகர் கோயில் எதிரில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 5. அத்தியந்தல் – திருநேர் அண்ணாமலை கோயில் அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 6. அத்தியந்தல் – பழனியாண்டவர் கோயில் அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 7. அத்தியந்தல் – சீனுவாசா பள்ளி அருகில் உள்ள காலியிடம், 8. அடி அண்ணாமலை – அருணகிரி நாதர் திருக்கட்டளை அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 9.அடிஅண்ணாமலை – கிராம சேவை மைய கட்டிடம் அருகில் – பக்தர்கள் ஓய்வுகூடம், 10. காஞ்சி ரோடு சாலை சந்திப்பில் உள்ள பக்தர்கள் ஓய்வுகூடம்,
11. பஞ்சமுக தரிசனம் அருகில் உள்ள காலியிடம், 12. விட்டோடிகள் சொத்து, 13. சிங்கமுக தீர்த்தம் எதிரில் உள்ள பிசி மாணவர் விடுதி அருகில், 14. கருணாநிதி சிலை எதிரில் ஆவின் பாலகம், 15. சாய் பாபா நகர் சோழா குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அருகில், 16. கணேஷ் லாட்ஜ் காலியிடம், 17. Art & Living Board பசுமை பாதுகாப்பு கூடம் எதிரில், 18. நிருதி லிங்கம், 19. வேலூர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 20. அவலூர்பேட்டை ரோடு தற்காலிக பேருந்து நிலையம்,
21. திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 22. வேட்டவலம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 23. திருகோவிலுர்ர் ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 24. மணலூர்பேட்டை ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 25. தண்டராம்பட்டு ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 26. செங்கம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம், 27. காஞ்சி ரோடு தற்காலிக பேருந்து நிலையம்.
அனுமதி அளிக்கப்பட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மற்றும் திருவண்ணாமலை செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் 22.11.2022 முதல் 26.12.2022 தேதி வரை அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
26ந் தேதி கடைசி நாள்
மேலும் விண்ணப்பிப்பதற்கு இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்று நகல், தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் அளிக்க வேண்டும்.
26.11.2022 தேதிக்கு பின்னர் அன்னதானம் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் அளிப்பவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது.
கிரிவலப்பாதையில் பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்ககூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்கவேண்டும். உணவு பொருட்கள் தரமானதாகவும், துய்மைதானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமலும் இருக்க வேண்டும்.
சட்ட ரீதியாக நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்ககூடாது பிளாஸ்டிக் டம்பளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பவர்களே உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். அன்னதானம் வழங்குமிடத்தை சுத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும்.
அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கிட இயலாது. மேலும் போதிய வழிக்காட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தொடர்புக்கு : 044-237416, 9047749266, 9865689838. என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.