பதவியேற்ற 6 மாதத்தில் திருவண்ணாமலை தாசில்தார் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
ஒவ்வொரு தாலுக்காக்களிலும் பணிபுரியும் தாசில்தார்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் பதவியேற்ற 6 மாதத்தில் திருவண்ணாமலை தாசில்தார் துரைராஜ் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரும் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதற்கான உத்தரவை கலெக்டர் தர்ப்பகராஜ் பிறப்பித்திருக்கிறார்.
மாற்றப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு,
கே.துரைராஜ், திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு தாசில்தாராக மாற்றம்.
எஸ்.மோகனராமன், தண்டராம்பட்டிலிருந்து திருவண்ணாமலை தாசில்தாராக மாற்றம்.
என்.திருநாவுக்கரசு, செங்கத்திலிருந்து திருவண்ணாமலை மண்டல துணை தாசில்தாராக மாற்றம்.
ப.மணவாளன், திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு துணை தாசில்தாராக மாற்றம்.
ஆர்.விஜயகுமார், தண்டராம்பட்டிலிருந்து செங்கம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக மாற்றம்.
கே.அழகுபாண்டீஸ்வரி, செங்கம் தேர்தல் பிரிவிலிருந்து, செங்கம் மண்டல துணை தாசில்தாராக மாற்றம்.
ஏ.கோபால், திருவண்ணாமலையிலிருந்து கீழ்பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளராக மாற்றம்.
எஸ்.ஏங்கல்ஸ்பிரபு கீழ்பென்னாத்தூரிலிருந்து திருவண்ணாமலை வடக்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளராக மாற்றம்.
திருவண்ணாமலை நகரில் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கணக்கெடுப்பு பணிகள் நடந்து முடிந்து பட்டா வழங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதே தாசில்தார் மாற்றத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு கீழ் உள்ள அலுவலர்களும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
இந்த பணி நியமனம் மற்றும் மாறுதல் தொடர்பாக எந்தவித விடுப்பு மனுவோ, கோரிக்கையோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, 30-4-2025 பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்று பிற்பகல் பணியிலிருந்து அலுவலர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை புதிய தாசில்தார் எஸ்.மோகனராமன் இன்று மாலை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பதவியேற்கவில்லை.
அதே சமயம் திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தாசில்தாராக இருந்த ராஜராஜேஸ்வரி, பறக்கும்படை தாசில்தாராக மாற்றப்பட்ட நிலையில் கலசப்பாக்கம் தாசில்தாராக தேன்மொழி என்பவர் இன்று பதவியேற்றார். இவர் இதற்கு முன் செங்கத்தில் ஆதிதிராவிடர் நல தனிதாசில்தாராக பதவி வகித்து வந்தார்.