3 வார்த்தைகள் எனக்கு கெட்ட வார்த்தைகள் என ஆய்வு கூட்டத்தில் தெரிவித்த கலெக்டர் தர்ப்பகராஜ், அடுத்தது சஸ்பெண்ட்தான் என அலுவலர்களை எச்சரித்தார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் மற்றும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் கீழ்பென்னாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி உதவி இயக்குநர் சையத் பயாஸ் அகமது, உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, வெயில் காலத்தினை கருத்திற்கொண்டு குடிநீர் சார்ந்த பணிகளை விரைந்து முடிக்கவும், ஒப்பந்ததாரர்கள் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கவும், நடைபெறும் பணிகளை பொறியாளர்கள் கண்காணித்திடவும் கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
நடக்காது, முடியாது, இயலாது என்பது எனக்கு கெட்ட வார்த்தை. அடுத்த மீட்டிங் வேற லெவில் இருக்கும். அடுத்த முறை கம்ப்யூட்டர் அருகில் இருக்கும். ஸ்பாட்டிலேயே சஸ்பெண்ட் தான் என அவர் அலுவலர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
போளூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் நிலுவையில் இருப்பதை பார்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவோம் என்ற உறுதி மொழியை ஒப்பந்ததாரர்களிடம் கலெக்டர் உத்தரவின்படி அதிகாரிகள் எழுதி வாங்கினர்.
சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தச்சம்பட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், பல மாதங்கள் ஆகியும் அதற்கான பணியே ஆரம்பிக்காததையும் கலெக்டர் தர்ப்பகராஜ் கண்டு பிடித்தார்.
இதனால் சம்பந்தப்பட்ட பொறியாளரை ஒரு பிடிபிடித்தார். அவர் அங்கன்வாடி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக பொறியாளர் தெரிவித்தார். தாசில்தார் மூலம் ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சிக்கவில்லை என கேட்ட கலெக்டர், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.