சமுத்திரம் ஏரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் உயிரிழந்த பரிதாபம்
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்ற 5 பேர் பலியாகினர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் இறந்துள்ளனர்.
திருவண்ணாமலை ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை அரசு நிதி உதவி பெற்று டெரிடெஸ் ஹோம்ஸ் கோர் டிரஸ்ட் நடத்தி வருகிறது. இந்த காப்பகத்தில் 46 சிறுமிகள் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட காப்பகத்தில் தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். இதில் திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் தொகுதி காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரிகள் விஜயலட்சுமி (வயது 16), அல்லி (14), பூமிகா (13) உள்ளிட்ட பலர் இன்று காப்பகத்திற்கு திரும்பினர்.
சிறிது நேரத்தில் காப்பகத்தின் பின்புறம் உள்ள சமுத்திரம் ஏரியில் குளிப்பதற்காக மேற்கண்ட 3 பேர் உள்பட 10 மாணவிகள் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, கீழ்பென்னாத்தூர் நெடுங்காம்பூண்டி கிராமத்தைச் வள்ளி (16) ஆகியோர் நீரில் மூழ்கினர்.
அவர்களை காப்பாற்ற சென்ற வழுத்தலங்குணம் கிராமத்தை சேர்ந்த காப்பாக ஊழியர் தேன்மொழி(24) சகதியில் சிக்கினார். இதைப் பார்த்து மற்ற மாணவிகள் கூச்சலிடவே கட்டிட தொழிலாளர்களும், அப்பகுதி இளைஞர்களும், மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி, ஆணாய்பிறந்தான் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் நீரில் மூழ்கியவர்களை கரை பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 5 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை கலெக்டர் வந்தனா கார்க், எஸ்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மாணவிகள் நீரில மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காப்பகத்திற்கு பின்புறம் உள்ள சமுத்திரம் ஏரியில் மழையினால் நீர் நிரம்பி உள்ளது. மாணவிகளின் பாதுகாப்பிற்காக இதுவரை சுற்றுச் சுவர் அமைக்கப்படாமல் இருந்து உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
காப்பகத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீதும், ஆய்வு செய்ய தவறிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சிறுமிகளின் உறவினர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளின் உறவினர் ஒருவர் திருநங்கை என்பதால் அவர் திருநங்கைகளை அழைத்து வந்து இச்சசம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.




No comments