திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் எ.வ.வேலு மண்வெட்டியால் வெட்டி புதர்களை அப்புறப்படுத்தி 1000 பேருடன் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு ஆரம்பித்துள்ள தூய்மை அருணை என்ற அமைப்பின் மூலம் திருவண்ணாமலை நகரில் ஞாயிற்றுகிழமை தோறும் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
39 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்தாலும் சில வார்டுகளில் போட்டோ எடுப்பது, பேஸ்புக்கில் பதிவிடுவது, வாட்ஸ் அப்பில் அனுப்பி பெருமைபட்டுக் கொள்வதோடு தூய்மை பணி நின்று விடுகிறது. இதனால் தூய்மை அருணை பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கடி ஆலோசனைளை வழங்கி வருகிறார். மேலும் அவரே சில நேரங்களில் நேரடியாக களம் இறங்கி தூய்மை பணியில் ஈடுபடுகிறார்.
2021 செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை வேட்டவலம் சாலை¸ கீழ்நாத்தூர்¸நாவக்கரை¸ பெருமாள் நகர்¸ காந்திநகர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நகராட்சி¸ நெடுஞ்சாலைத்துறை¸ தூய்மை அருணை இயக்கம் இணைந்து நடத்திய மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமினை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து¸ கால்வாய் தூர் வாருதல், கொசு மருந்து அடித்தல், மரக்கிளைகளை கொடுவாளால் வெட்டி அகற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தூய்மை அருணை மூலம் தூய்மை படுத்தும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இதற்காக அவர் தூய்மை அருணை சீருடையான நீல நிற பேண்ட்¸ மஞ்சள் நிற டீ ஷர்ட்டுன், தலையில் தொப்பி அணிந்து வந்திருந்தார். கையில் மண்வெட்டியை எடுத்து புதர்களை வெட்டி அப்புறப்படுத்தினார். இதைத் தொடர்ந்து 1000 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணி காலை தொடங்கி பகல் 12-30 மணி வரை நடைபெற்றது. இலை, தழை போன்ற குப்பைகளும், முட்புதர்களும், பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது. மண்மேடுகள், பள்ளங்கள் சரி செய்யப்பட்டன. இதற்காக 3 ஜேசிபி, 3 டோசர், 3 லாரி, 3 டிராக்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது தூய்மை அருணை தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த அமைப்பு அரசியல் சார்பற்றது. இந்த அமைப்பில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். மருத்துவமனை தலைவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் தூய்மை படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் அடுத்த வாரமும் இங்கே தூய்மை பணி நடைபெறும் என குறிப்பிட்டார்.
சிறிது நேரம் மட்டுமே அங்கிருந்த அமைச்சர் எ.வ.வேலு, மதுரையில் நடக்கும் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவசரமாக புறப்பட்டு சென்றார்.
தூய்மை பணியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, தூய்மை அருணை மேற்பார்வையாளர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திவேல் மாறன், பிரியா விஜயரங்கன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், துறை தலைவர் ஜி.வெங்கடேசன், டாக்டர் யுவராஜ் மற்றும் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்களும், தூய்மை காவலர்களும் கலந்து கொண்டனர்.