3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது க.உண்ணாமலைபாளையம். இங்கு வசிப்பவர் பரசுராமன்(30). மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா(27). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது. நிலவரசன்(5), குறளரசன்(3) ஆகிய மகன்களும், யாசினி என்ற 9மாத கைக்குழந்தையும் உள்ளது. பரசுராமன், தனது அண்ணன், தாய், தந்தையோடு கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். 

அமுதா, தனது தாயார் வீடான மேல்செக்கடிக்கு சென்று விட்டு நேற்று இரவு ஊர் திரும்பினார். இன்று திடீரென உண்ணாமலைபாளையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாழவச்சனூர் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் 3 குழந்தைகளை மூழ்கடித்து விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதைப்பார்த்த சிலர் குழந்தையையும், தாயையும் காப்பாற்ற முயன்றனர். அமுதா காப்பாற்றப்பட்ட நிலையில் 3 குழந்தைகளும சடலாக மீட்கப்பட்டன. அமுதா சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

3 குழந்தைகளின் உடலும் பரசுராமனின் வீட்டில் வைக்கப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து தந்தையும், உறவினர்களும் கதறி அழுதனர். தகவல் கிடைத்ததும் தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாமியாரோடு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அவர் குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் குழந்தைகளின் இறப்பில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

3 குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை முயற்சி

பரசுராமனின் அண்ணன் ரங்கநாதன், பாமகவில் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் கிடைத்ததும் பாமக முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.வே.பிரசாத் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பரசுராமனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

பெற்ற குழந்தைகளை தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Post Previous Post

No comments