தேனீக்கள் கொட்டியதில் 31 மாணவர்கள்- ஆசிரியர்கள் காயம்
திருவண்ணாமலை அருகே பள்ளியில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பறந்து வந்து கொட்டியதில் 31 மாணவ-மாணவியர்கள்¸ 5 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர்.
இது பற்றிய விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 12 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. மங்கலம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 13ஆம் தேதி பள்ளிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்ததது. நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. தேசிய கீதம் பாடி முடிந்ததும் மாணவ- மாணவியர்கள்¸ ஆசரியர்கள் வகுப்புக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பள்ளியின் 3வது மாடியிலிருந்து பறந்து வந்த தேனீக்கள் மாணவ-மாணவியர்களையும்¸ ஆசிரியர்களையும் கொட்டியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர். தேனீக்களும் விடாமல் துரத்தி துரத்தி கொட்டியது.
இதில் வெற்றிவேல்¸ பானு¸ பாக்கியலட்சுமி¸ மணிமேகலை உள்பட 11 மாணவர்கள்¸ 20 மாணவிகள் என 31 பேர் படுகாயமடைந்தனர். இதே போல் ஆசிரியர்கள் தரப்பில் பூபதி¸ மேகலா¸ திருவேங்கடம்¸ சத்தியராஜ்¸ சுதாகர் ஆகிய 5 பேர் காயடைந்தனர். 36 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேன் கூடு கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 3 முறை தேன் கூடு. தீயணைப்பு துறையினர் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு செயல்பட்டு வரும் பள்ளியின் 3 மாடியில் 4வது முறையாக தேன் கூடு கட்டியுள்ளது. மொத்தம் 2 கூடுகளை தேனீக்கள் கட்டியுள்ளன.
இவற்றை அழிக்க பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வராத கோடை விடுமுறையின் போதோ அல்லது சனி¸ ஞாயிறு விடுமுறை நாட்களிலோ தேன் கூட்டை அகற்றாமல் பள்ளி நிர்வாகம் விட்டு விட்டது என்று குற்றம் சாட்டியுள்ள பெற்றோர்கள்¸ அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





No comments