திருவண்ணாமலைக்கு 2 யானை கேட்டு அதிகாரி கடிதம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இரண்டு யானை வழங்க கேட்டு கோயில் இணை ஆணையாளர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் உற்சவங்களில் யானைகள் பங்கு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. ஆன்மீகத்தில் கோ பூஜை போன்று கஜ பூஜை மிகவும் பிரபலமாகும். வரலாற்றில் விநாயகரின் அம்சமாக¸ முருகனின் வாகனங்களில் ஒன்றாக¸ சிவபெருமான் அவதாரம் எடுத்த கஜசம்ஹார மூர்த்தியாக யானை விளங்குகிறது. குறிப்பாக யானை நம்மை ஆசிர்வதிக்கும் போது அதன் மூச்சுக்காற்று நம்மீது பட்டால் நமது இன்னல்கள் தீரும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இப்படி சிறப்பு பெற்ற யானை¸ தொன்மையான கோயிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த 3வருடங்களாக கார்த்திகை தீப திருவிழாக்களிலும் யானை இல்லாமலிருந்தது பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------
திருவண்ணாமலை கோயிலுக்கு அசாமிலிருந்து யானை---முந்தைய செய்தியை படிக்க...https://www.agnimurasu.com/2022/05/blog-post_24.html
--------------------------------------------------------------------------------------------
இன்னிலையில் தொழிலதிபர் ஒருவர் திருவண்ணாமலை கோயிலுக்கு யானையை நன்கொடையாகத் தருவதாக இசைவு தெரிவித்ததையடுத்து யானை வாங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்காக யானைகளை பார்வையிட அசாம் மாநிலத்திற்கு யானைப்பாகன் உள்பட 4 பேர் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு இரண்டு யானைகளை வழங்கும்படி கோவில் இணை ஆணையாளர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதற்காக அசாம் மாநிலம்¸ டின்சுகியா மாவட்டம்¸ செங்கலிஜான் காவ்ன் நகரைச் சேர்ந்த ராகுல் தத்தா என்பவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் திருவண்ணாமலை கோயிலின் ஆன்மிக சடங்குகள் மற்றும் விழாக்களுக்கு யானைகள் தேவை. இங்கு ஏராளமான இடவசதியும்¸ யானைக்கு ஏற்ற சூழலும் உள்ளது. மேலும் யானைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் கவனித்துக் கொள்ளும்¸ எனவே எங்கள் கோவிலுக்கு 2 யானையை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்துடன் யானை பாகன் உள்பட 4 பேர் அசாமிற்கு விமானத்தில் சென்று அங்கேயே தங்கி யானைகளை பார்வையிட்டு வருகின்றனர். ஏறக்குறைய யானையை தேர்வு செய்து முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யானையை ஏற்றிச் செல்ல மத்திய அரசின் வனத்துறையின் சிறப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில வளர்ப்பு யானைகள் பல்வேறு மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு¸ குஜராத்¸ மகாராஷ்டிரா¸ உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் உள்ள கோயிவில்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. சாலை வழியாக கொண்டு செல்லப்படும் போது கால்நடை மருத்துவரும் வளர்ப்பு யானைகளுடன் வருவார்கள் என்பதை குறிப்பிட்டு¸ இதற்கு அனுமதி தருமாறு இம்ரான் சித்திக் என்பவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே இந்த சம்பிரதாயங்கள் முடிவு பெற்ற உடன் திருவண்ணாமலை கோயிலுக்கு யானை கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. யானைக்கு¸ பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்வதற்கும்¸கழுத்தில் மாலை போடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும் வீடியோ வெளியாகி பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 2 யானைகள் வழங்க கேட்டிருப்பது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


No comments