பல்லி விழுந்த உணவை பரிமாறிய 2 பேர் சஸ்பெண்ட்
சேத்துப்பட்டு அருகே பல்லி விழந்த உணவை சாப்பிட்ட 17 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையொட்டி 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு¸
திருவண்ணாமலை மாவட்டம்¸ சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியுள்ளது கருங்காலிகுப்பம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சத்துணவு மையம் உள்ளது.
இன்று (23.11.2021) பகல் 12.45 மணிக்கு மாணவ-மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 17 மாணவ¸ மாணவிகளுக்கு உணவு வழங்கிய நிலையில் உணவில் பல்லி இருப்பதை கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ-மாணவியர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.
பின்னர் 17 மாணவ மாணவிகளையும் அருகில் உள்ள வடமாதிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தகவல் கிடைத்ததும் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பதட்டத்தோடு ஓடி வந்தனர். பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிற்பகல் 3 மணியளவில் 17 மாணவ¸ மாணவிகளும் நல்ல நிலையில் உள்ளனர் என வட்டார மருத்துவ அலுவலர் சான்று அளித்தார். இதையடுத்து அனைவரும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக பணிபுரிந்த சமையலர் மற்றும் சமையல் உதவியாளரான அன்னம்மாள்¸ ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்தார்.
No comments