திருவண்ணாமலை:மண்ணுக்குள் புதைந்து 2 பேர் பலி

திருவண்ணாமலை:மண்ணுக்குள் புதைந்து 2 பேர் பலி

போளுர் அருகே புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 பேர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக பலியானார்கள். 

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிக்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவர் தனது நிலத்தில் புதியதாக கிணறு தோண்டிக் கொண்டிருந்தார். இந்த பணி கடந்த 25 நாட்களாக நடந்து கொண்டிருந்தது. நேற்று கிணற்றை மேலும் ஆழப்படுத்திட வெடி வைக்கப்பட்டது. 

பிறகு இன்று காலை வெடி வைத்து வெடித்ததனால் கிணற்றுக்குள் சூழ்ந்திருந்த மண்ணை வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று இரவு முழுவதும் பெய்த மழையினால் கிணற்றின் மேற்பரப்பில் கொட்டியிருந்த மண் நன்றாக ஊறி இருந்தது. அதில் ஒரு பகுதி திடீரென கிணற்றுக்குள் சரிந்தது. 

இதனால் கிணற்றுக்குள் இருந்த 3 பேரும் மண்ணுக்குள் புதைந்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். மேலும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மண் குவியலை அகற்றி 3 பேரையும் வெளியில் எடுத்தனர். 

திருவண்ணாமலை:மண்ணுக்குள் புதைந்து 2 பேர் பலி

3 பேரையும் கிணற்றுக்குள் இருந்து மேலே கொண்டு வந்த போது அதில் பெலாசூர் கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்கிற ரவீந்திரன்(வயது 31)¸ புதுக்கரிக்காத்தூரைச் சேர்ந்த அர்ஜூனன்(48) ஆகிய 2 பேர் மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. உயிருக்கு போராடி கொண்டிருந்த அர்ஜூனனின் தம்பி மாயக்கண்ணனை சிகிச்சைக்காக போளுர் அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக போளுர் அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

புதிய கிணறு தோண்டும் பணியில் 2 பேர் மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் போளுர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன்¸ இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இது குறித்து போளுர் போலீசார்¸ நிலத்தின் உரிமையாளர் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Next Post Previous Post

No comments