தி.மலை:கொரோனா 2வது அலை தடுக்கப்பட்டுள்ளது

தி.மலை:கொரோனா 2வது அலை தடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2வது அலை பரவாமலிருக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைளை எடுத்திருப்பதாக முதன்மை செயலாளர்  தெரிவித்தார். 

நோய் தடுப்பு நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமலிருக்க மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. 

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ் குமார் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி¸ மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செ.அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமரசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி வருவாய்த்துறை¸ சுகாதாரத்துறை¸ மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசியை அதிகரிக்க ஆணை

நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை¸ நோய் பரவும் வீதம்¸ அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை¸ இறப்பு விகிதம்¸ கோவிட் கேர் சென்டர் தொடர்பான விவரங்களை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். 45 வயது  மேற்பட்ட நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும்¸ முககவசம் அணியாதவர்கள்¸ சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் உரிய அபராதம் விதித்து அவர்களுக்கு நோய் பரவலில் இருந்து காத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டுமென தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவும்¸ மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்து பொருட்களின் கையிருப்பு¸ தேவையின் அளவு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு மற்றும் அங்குள்ள கழிப்பிடங்களை துய்மையாக வைத்திருக்கவும்¸ அரசு அலுவலகங்கள்¸ வழிபாட்டுதளங்கள்¸ வணிகவளாகங்கள்¸ ஓட்டல்கள்¸ பூங்காக்கள் மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிடவும்¸ இதை அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படத் தவறினால் உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

தி.மலை:கொரோனா 2வது அலை தடுக்கப்பட்டுள்ளது

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் முதன்மை செயலாளர் தீரஜ் குமார் தெரிவிக்கையில்¸

கொரோனா பாதிப்பு குறைவு

மாவட்ட நிர்வாகத்தால் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் அலை பரவாமலிருக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது¸ மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது¸ கொரோனா வைரஸ் நோய் தொற்று அடைந்தவர்களுடன் தொடர்பு கொண்டு நபர்களை சரியான முறையில் கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை¸ கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும் தகுந்த நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

காய்சல் முகாமில் தடுப்பூசி

பிறகு அவர் திருவண்ணாமலை-செங்கம் சாலை பழைய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள 100 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும்¸ திருவண்ணாமலை நகராட்சி கட்டுபடுத்தப்பட்ட பகுதியான (Containment zone) வ.உ.சி நகர் 2வது தெரு மற்றும் வேங்கிக்கால் இடுக்கு பிள்ளளையார் 4 வது தெரு ஆகியவற்றில் காய்சல் முகாம் நடைபெற்று வருவதையும்¸ தடுப்பூசி செலுத்துவதையும் பார்வையிட்டார். 

மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள தீரஜ்குமார்¸ ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

படிப்படியாக உயர்வு 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1ந் தேதி பாதித்தவர்களின் எண்ணிக்கை  10ஆக இருந்தது. இன்று 125ஆக உயர்ந்துள்ளது. 2ந் தேதி ஒருவரும்¸ 6ந் தேதி ஒருவரும்¸ 7ந் தேதி ஒருவரும் இறந்திருக்கின்றனர். 


Next Post Previous Post

No comments