திருவண்ணாமலை ஏரியில் மிதந்த ஆடிட்டர் உடல்

திருவண்ணாமலை ஏரியில் மிதந்த ஆடிட்டர் உடல்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் ஆடிட்டர் ஒருவர் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை புதுவாணியங்குளம் 8வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் அருண்குமார் (வயது 28). பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவருக்கு திருவண்ணாமலை பேகோபுரத் தெருவைச் சேர்ந்த அபிராமி என்பவருடன் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

சென்னையில்

அருண்குமார் சென்னையில் உள்ள தனியார் ஷூ  கம்பெனியில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார். மனைவியை பிரிந்து இவர் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

2 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த அருண்குமார்¸ ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. அருண்குமாரின் பெற்றோர்கள்¸ உறவினர் வீடுகளிலும்¸ நண்பர்கள் வீடுகளிலும் தேடினர். அவர் வேலை செய்யும் கம்பெனியிலும் விசாரித்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உப்பிய நிலையில்

இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரிக்கு சென்ற பெண்கள் சிலர் ஏரியில் பிணம் மிதப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடல் உப்பிய நிலையில் இருப்பதை பார்த்து உடலை மீட்க தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். அவர்கள் உடலை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

திருவண்ணாமலை ஏரியில் மிதந்த ஆடிட்டர் உடல்

கொலையா?

போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் பிணமாக மிதந்தது புதுவாணியம்  குள தெருவில் காணாமல் போன அருண்குமார் என்பது தெரியவந்தது. மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த அவர் மது அருந்த அப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவருடன் சென்ற நண்பர்கள் யார்? அருண்குமார் கொலை செய்யப்பட்ட பிறகு உடல் ஏரியில் வீசப்பட்டதா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை போதை தலைக்கேறி ஏரியில் தவறி விழந்து விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. 

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Post Previous Post

No comments