ஐடி கம்பெனி பொறியாளர் உள்பட 4 பேர் பலி
திருவண்ணாமலை அருகே 2 காரின் மீது மோதிய அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு¸
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ஸ்ரீபால்(வயது 42). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மபிரியா(34). இவர்களுக்கு ஆர்யா (12) என்ற மகனும்¸ மிருதுளா (8) என்ற மகளும் உள்ளனர்.
ஸ்ரீபால்¸ திருவண்ணாமலை மின் நகரைச் சேர்ந்த டிராஸ்போர்ட்டு தொழில் செய்து வந்த சதீஷ் (68) என்பவரது மகளை திருமணம் செய்துள்ளார்.சதீஷ்¸ தனது மனைவி சாந்தியுடன்(60) சென்னைக்கு சென்று செட்டில் ஆகி விட்டார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் தங்களது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீபால்¸ தனது மனைவி¸ குழந்தைகள்¸ மாமனார்¸ மாமியாருடன் தனக்கு சொந்தமான காரில் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். காலை 11-50 மணி அளவில் திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே வந்த போது இந்த காரும்¸ எதிரே திருவண்ணாமலையிலிருந்து வேலூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும் மோதிக் கொண்டன.
இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஸ்ரீபால்¸ அவரது மனைவி பத்மபிரியா¸ மாமியார் சாந்தி ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி செத்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீபாலின் மாமனார் சதீஷ் இறந்தார்.
இந்த விபத்தினால் நிலைதடுமாறிய அரசு பஸ் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் இந்த காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. அதில் பயணம் செய்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். காரில் இடிபாடுகளில் சிக்கிய உடல்களை போலீசாரும்¸ தீயணைப்பு படையினரும் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியால் மீட்டனர். 3 பேரும் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் தாய்-தந்தை மற்றும் தாத்தா-பாட்டியை இழந்த ஆர்யாவும், மிருதுளாவும் தனித்து விடப்பட்டுள்ளனர். ஏதும் அறியாத வயதில் அடுத்தவர்களின் உதவியை எதிர்நோக்கும் நிலைக்கு இந்த குழந்தைகள் தள்ளப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments