36 வருடத்திற்கு பிறகு தண்ணீரை பார்த்த ஏரி கால்வாய்
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரியமங்கலம் ஏரி வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டதால் 36ஆண்டுகளுக்கு பிறகு அந்த கால்வாயில் தண்ணீர் சென்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மலர் தூவி வரவேற்றார்
குடிமராமத்து திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ள குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பை சார்ந்த ஏரிகளை அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
59 ஏரிகள் புனரமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மத்திய பெண்ணை ஆறு வடிநில கோட்டம் மற்றும் காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநில கோட்டம் மூலமாக ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் 59 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது¸ இதன் மூலம் 6034.81 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும். குடிமராமத்துப் பணிகள் நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீனாவதை தடுத்தும்¸ தண்ணீர் சேமித்தும்¸ பாசன உறுதியளிக்கவும்¸ நீர் ஆதாரத்தை பெருக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இத்திட்டத்தின் கீழ் செங்கம்¸ தோக்கவாடி¸ கரியமங்கலம் மற்றும் காரப்பட்டு ஆகிய ஏரிகள் மொத்தம் ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு¸ வரத்துக் கால்வாய் சீரமைக்கப்பட்டு¸ ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. செங்கம்¸ தோக்கவாடி ஏரிகள் குடிமராமத்து திட்டத்தில் புனரமைக்கப்பட்டதால்¸ நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக குப்பநத்தம் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரினால் செங்கம்¸ தோக்கவாடி ஏரிகள் முழுமையாக நிறைந்துள்ளது. மேலும்¸ இந்த ஏரிகள் மூலம் உபரிநீர் அதன் கீழ் உள்ள 10 ஏரிகளும் தற்போது நிரம்பி வருகிறது.
![]() |
| கரியமங்கலம் ஏரி கால்வாய் |
36 ஆண்டுகளுக்கு பிறகு
கரியமங்கலம் ஏரி புனரமைக்கப்பட்டு¸ வரத்து கால்வாய் சீரமைக்கப்பட்டதன் காரணத்தால் 36 ஆண்டுகளுக்கு பிறகு செங்கம் ஏரியிலிருந்து உபரிநீர் கரியமங்கலம் ஏரி வரத்து கால்வாயில் முதன்முறையாக தண்ணீர் சென்றதால் விவசாயிகளும்¸ பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் இன்று அந்த கால்வாயை பார்வையிட்டு மலர்தூவி தண்ணீரை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர். சந்தீப் நந்தூரி¸ ஆவீன் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி¸ முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்¸ அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள்¸ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள்¸ பாசனதாரர்கள்¸ விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
8ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்
கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் ஏரியின் உபரிநீர் திறந்துவிடப்படும். கரியமங்கலம் ஏரிக்கான வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளால் கடந்த 36 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.97.00 இலட்சம் மதிப்பீட்டில் கரியமங்கலம் ஏரி மற்றும் வரத்து கால்வாய் புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. கரியமங்லம் ஏரிக்கு உட்பட்ட பாசன சங்கத்தினரால் 6 சென்ட் நிலம் பொதுப்பணித் துறைக்கு வாங்கித் தரப்பட்டது. மேலும்¸ வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 100 மீட்டர் நீளம் சிமெண்ட் கால்வாய் கட்டப்பட்டது.
மேலும் 300 மீட்டர் நீளம் சிமெண்ட் கால்வாய் இந்த ஆண்டு கட்டப்படவுள்ளது. மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கண்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால்¸ கரியமங்கலம் ஏரிக்கு அதன் வரத்து கால்வாய் வழியாக எவ்வித தடைகளும் இன்றி¸ தற்போது சீராக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும்¸ இப்பகுதியின் 16 கிராமங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 8000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெறுவார்கள்.
இரண்டு பயிர் வைக்க முடியும்
செங்கம் வட்டம்¸ அன்டைபேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (வயது 47) தெரிவிக்கையில் ‘கரியமங்கலம் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால்¸ ஒரு பயிர் எடுப்பதற்கே போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் முழுமையாக காய்ந்து மிகவும் கஷ்டப்பட்டு வந்தோம். தற்போது கரியமங்கலம் ஏரி மற்றும் வரத்து கால்வாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட காரணத்தால் எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் இரண்டு பயிர் வைக்க முடியும். மேலும்¸ அடுத்த 6 மாதங்களுக்கு எங்கள் பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் தண்ணீர் தேவை பூர்த்தி அடைந்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.



No comments